உலகின் அடுத்த பெரிய பொருளாதாரப் புரட்சி, டோக்கனைசேஷன் Tokenization மூலம் வரும் என்கிறார் வ்லாட் டெனெவ் (Vlad Tenev). இவர் ராபின்ஹூட் (Robinhood) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.
ராபின்ஹூட் நிறுவனம் சமீபத்தில் உலகின் பெரிய நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்படுவதற்கு, இவர்கள் செய்த டோக்கனைசேஷன் முயற்சி ஒரு முக்கியமான காரணமாகும்.
உதாரணமாக, இந்தியாவில் உள்ள உங்களால் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனப் பங்குகளை நேரடியாக வாங்க முடியாது. அதேபோல், அமெரிக்காவில் உள்ள என்னால் ராம்கோ சிமென்ட்ஸ் போன்ற இந்தியப் பங்குகளை எளிதில் வாங்க முடியாது. காரணம், அந்தப் பங்குகள் மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படுவது இல்லை.
ஆனால், டிஜிட்டல் நாணயங்கள் (Cryptocurrency) இரண்டு நாடுகளிலும் உள்ளன. இந்தியாவிலும் பிட்காயின் வாங்க முடியும், அமெரிக்காவிலும் வாங்க முடியும்.
ராபின்ஹூட் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஆப்பிள் பங்குகளை வாங்கியது. அதன்பின், அந்தப் பங்குகளின் விலையை அடிப்படையாக வைத்து, ஒவ்வொரு பங்கையும் சிறு துண்டுகளாக உடைத்து பிளாக்செயின் நாணயங்களை (டிஜிட்டல் டோக்கன்கள்) உருவாக்கியது.
ஆப்பிள் பங்கின் மதிப்பு 250 டாலர் என்றால், அது ஒரு டாலர் மதிப்புள்ள 250 டிஜிட்டல் நாணயங்களாக மாற்றப்படும். மாற்றப்பட்ட இந்தக் நாணயங்கள், ஆப்பிள் பங்குகளை நேரடியாக வாங்க முடியாத நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் நாணயப் பரிமாற்றத் தளங்கள் மூலம் விற்கப்பட்டன.
இதற்கு கிடைத்த வரவேற்பு தான், உலகப் பங்குச் சந்தை விதிகளை எல்லாம் டோக்கனைசேஷன் மூலம் மாற்ற முடியும் என்று வ்லாட் டெனெவ் கூறுவதற்குக் காரணம்.
இதேபோல், பாரம்பரியமாக விற்கக் கடினமான அசையாச் சொத்துக்கள் போன்ற சொத்துக்களைச் சிறு பகுதிகளாகப் பிரித்து, 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் உலகளவில் விற்க முடியும்.
.உதாரணமாக, உங்களிடம் பூர்வீக பங்களாவுடன் கூடிய 50 ஏக்கர் நிலம் உள்ளது என்றால், நீங்கள் ஆளைப் பிடித்து முத்திரை வரி கட்டி, வெள்ளை, கருப்புப் பணப் பரிவர்த்தனையில் அலைவதற்குப் பதிலாக, ஒரு பாதுகாவலர் (custodian) நிறுவனத்தைத் தொடங்கி, பங்களாவை அந்த நிறுவனத்தின் பெயருக்குச் சட்டப்பூர்வமாக மாற்றி, அந்த நிறுவனத்தின் பங்குகளை நாணயங்களாக மாற்றி டிஜிட்டல் நாணயப் பரிமாற்றத் தளத்தில் விற்றுவிடலாம்.
பிளாக்செயின் பதிவேடு வெளிப்படையானது என்பதால், சொத்தின் உரிமை மற்றும் பரிவர்த்தனை வரலாற்றை அனைவரும் சரிபார்க்க முடியும்.
இதேபோல், உங்கள் நிறுவனம், நிலம், வீடு, பங்குகள், தொழிற்சாலை என வருமானம் வரும் அனைத்துமே இனி உலகெங்கும் இலக்கமுறைக் காசுகளாக (digital coins) வாங்கி விற்கப்படும் என்கிறார் வ்லாட் டெனெவ்.
அசையாச் சொத்து என்றால் முத்திரை வரி கட்ட வேண்டுமே? அரசு விதிகள் என்னாவது? உலகெங்கும் இருந்து கருப்புப் பணம் தடையின்றிப் பாயுமே? வரிகள் என்ன ஆவது?" என நீங்கள் கேட்கலாம்.
அதற்கான விடைகளை உலகம் இனிதான் தேடவேண்டும். தொழில்நுட்பம் முதலில் புலிப்பாய்ச்சலில் வரும். அரசுகள் விழித்துக்கொண்டு சட்டம் போட்டுக்கொண்டு, தடுக்க முயல்வதற்குள் தொழில்நுட்பம் வேரோடிவிடும். அதற்குள் ஏகபட்ட பித்தலாட்டம், போர்ஜரிகள், பிராடுகள் நடந்துமுடிந்திருக்கும். க்ரிப்டோவில் சூதாடியது மாதிரி இதிலும் நடக்கும்.
ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்ட கில்லாடி #பிசினஸ்_பிஸ்தாக்கள் இதிலும் க்ரிப்டோ மில்லியனர்கள் உருவானதுபோல உருவாவார்கள் என்பதும் நிச்சயம்
பார்க்கத்தானே போகிறோம், இந்த காளியோட ஆட்டத்தை?
~ நியாண்டர் செல்வன்