-
வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி
அடுத்த மாதம் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
சென்னை, செப்.12-2025
மத்திய அரசு,தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிராவிடண்ட் பாண்ட் பி எஃப் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதில், தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை அவர்கள் பணியாற்றும் நிறுவனமும், தொழிலாளர்களும் செலுத்தி வருகிறார்கள்.
நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு தற்போது வழங்கி வரும் டிஜிட்டல் சேவையை மேலும் நவீன அம் சங்களுடன் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது.
அதன்படி, வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். எந்திரத்தின் மூலமாக எடுக்கும் வசதி அடுத்த மாதம் அமல்படுத்தப்பட உள்ளது.
இதேபோல வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகமாக உள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்ட வியா தலைமையில் டெல்லியில் அடுத்த மாதம் அக்டோபர் 10, 11-ந்தேதிகளில் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகை பரிசாக இந்த வசதி அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இருந்த போதிலும் பிஎஃப் என்பது பணி ஓய்வு காலத்தில் ஒருவர் செலவு செய்வதற்கான தொகையாகும். அந்தப் பணத்தை இடையே எடுத்து செலவு செய்து விட்டால் கடைசி காலத்தில் கஷ்டம் தான்.
எனவே இந்த ஏடிஎம் வசதி மக்களை கஷ்டப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
மக்களும் மிக அவசிய தேவைக்கு மட்டுமே ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்க வேண்டும் மற்றபடி அதனை பணி ஓய்வு காலத்துக்கு தான் பயன்படுத்த வேண்டும் என்பது நிதி முதலீட்டின் தாழ்மையான கோரிக்கையாகும்.