மொத்தப் பக்கக்காட்சிகள்

FD ஃபிக்ஸட் டெபாசிட் போட்டிருப்பவர்கள் முக்கிய கவனத்திற்கு..

"சார், அந்த சிங்காரத்தோட
டெபாசிட் எல்லாத்தையும் நம்ம Head office-ல unclaimed deposit-ஆ மாத்திட்டாங்க சார்"

"ஆமாம்பா, அதுதான் பேங்க் பாலிசி. Claim செய்யப்படாத டெபாசிட்டுக்கெல்லாம் அதே கதி".

"அப்போ.... எதிர்காலத்தில் ஒரு நாள் அவருடைய வாரிசுகள் வந்து கேட்டால் எப்படி சார் கொடுப்பது?"

"வாரிசுகள் எல்லா டாக்குமெண்ட்டும் கொடுத்து, அவை சரியாகவும் இருந்தால், ஹெட் ஆபீசுக்கு அனுப்பி அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்று அவர்களுக்குக் கொடுத்து விடலாம்."

மதுரையில் ஒரு வங்கிக் கிளையில் நடக்கிற இந்த உரையாடலை நான் மேலிருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தேன். நான் தான் அந்த சிங்காரம்.

மேலிருந்து? ஆமாம், மேலே இருந்துதான். நான் பூலோகத்தை விட்டுப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. பூலோக கணக்கில் 10 வருடம். பத்து நாள் என்று தான் இங்குள்ள கணக்கு.

இப்போது நான் இருப்பது சொர்க்க பூமி இல்லை. நரக லோகமும் இல்லை. விஷ்ணு லோகமும் இல்லை. இது என்ன லோகம் என்று எனக்கே தெரியாது. மறுபிறவி எடுக்க வேண்டியவர்கள் இங்குதான் இருப்பார்களாம். இன்னும் எவ்வளவு காலம் இங்கு இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. 

என்னைப் போல் பூலோகத்தில் வாழ்க்கையை முடித்தவர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். 
என் மனைவியும் கூட. 

நான் 'போய்' மூன்று வருடங்களுக்குப் பிறகு அவளும் 'போய்'ச் சேர்ந்தாள்.
அதாவது இங்கு வந்து சேர்ந்து விட்டாள்.

இது ஒரு parking place என்று நினைக்கிறேன். மறுபடியும் பூலோகத்தில்தான் பிறக்கப் போகிறேனா, அப்படியே பிறந்தால் மனிதனாகப் பிறப்பேனா, மாடாகப் பிறப்பேனா, சிங்கமாகப் பிறப்பேனா, புழு பூச்சியாகப் பிறப்பேனா...... எதுவும் எனக்கு இப்பொழுது தெரியாது. எனக்குத் தெரிந்தால் தான் உங்களுக்கு சொல்ல முடியும். அதுவரை பொறுக்கவும்.

யம கிங்கரர்கள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவருக்கு நான் இப்போது நண்பன்.

நான் சூசகமாக விசாரித்த வரை, எமதர்மராஜன் இன்னும் முடிவெடுக்கவில்லையாம். என்ன காரணம் என்று தெரியவில்லை.  அதுவரைக்கும் இந்த ரெண்டுங்கெட்டான் லோகத்தில் வெயிட்டிங்.

அந்த வங்கியில் உள்ள டிபாசிட்டுகள் என்னுடையதுதான். எங்கள் இருவர் பேரில் இருந்தன. நான் 'போன' பிறகு என் மனைவி தான் அவற்றுக்குச் சொந்தக்காரி. இப்பொழுது அவளும் 'போய்'ச் சேர்ந்து விட்டபடியால் என் மகனும் மகளும் தான் ஜாயிண்ட் சொந்தக்காரர்கள். அதாவது..... Joint Nominees.

என் மகன் புதுடில்லியில் சகல வசதிகளுடன் வாழ்கிறான். மகள் திருமணமாகி ஜெர்மனியில் எங்கோ செட்டிலாகிப் பல ஆண்டுகள் கழிந்து விட்டன. 

மகன் அந்த வங்குக்கு சென்று என்னுடைய டெபாசிட்களை Claim செய்தான். ஜாயிண்ட் நாமினேஷன் ஆனபடியால் அண்ணன் தங்கை இருவருடைய KYC papers-உம் கேட்டார்கள். என் மகளுக்கும் அவளுடைய கணவனுக்கும் இதில் எந்த அக்கறையும் இல்லை. அவளுக்குத் தன் அண்ணனுடன் தொடர்பும் இல்லை. பிறகு என்ன செய்வது? 

நான் ஏன் இவ்வளவு பணத்தை அப்படியே விட்டு விட்டு இறந்து போனேன் என்று தெரியவில்லை. என் வாழ்நாளில் நானே அனுபவித்துவிட்டுப் போயிருக்கலாமோ என்று இப்பொழுது தோன்றுகிறது. 

ஏழைக் குழந்தைகளுக்கும் அனாதைகளுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளைச்
செய்யவில்லை.
 
வேத பாடசாலைகளுக்கும் கோசாலைகளுக்கும் உதவி  செய்யவில்லை.. 

சிறிய கோவில்களுக்குத் திருப்பணிக்குப் பண உதவி செய்யவில்லை.... 

இவ்வளவு பணம் இன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது.

குறைந்தது,
அந்தப் பழைய காரை விற்றுப் புதிய கார் வாங்கி நான் அனுபவித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.

வீட்டில் உள்ள பழைய பொருட்களை போட்டு புதிய பொருட்களை வாங்கி இருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. 

ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது உலகச் சுற்றுலா சென்று வந்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.

நானும் அனுபவிக்க முடியவில்லை. இப்போது என் சந்ததியினரும் அதை அனுபவிக்கவில்லை.

 வங்கி அனுபவித்துக் கொண்டிருக்கிறது!

என்னைப் போல்
ஆயிரமாயிரம் பேர் தாங்கள் 
சேர்த்து வைத்த பணம் இப்படித்தான்  வங்கிகளில் கிடக்கிறது. 

இதே போலத்தான் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலும் கூட.
Unclaimed policy மற்றும் lapsed policy-களில் எத்தனையோ கோடி ரூபாய் கேட்பாரற்றுக் குவிந்து கிடக்கிறது! 

நான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்திச் சம்பாதித்துச் சேர்த்த சேமிப்புக்குத் தான் இந்த கதி என்றால், மதுரையில் நான் வசித்த அதிநவீனக் குடியிருப்பும் இப்படியே கேட்பாரற்றுக் கிடந்தது. unclaimed property ஆகிவிட்டது. 

இந்தச் சொத்தை மீட்க யாரும் வரமாட்டார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகு அந்த builder அந்த வீட்டுக்கு ஒரு புது விற்பனைப் பத்திரம் தயார் செய்து கதவு எண் 20 என்பதை 20அ என்று மாற்றி இன்னொருவருக்கு விற்று விட்டார்! 

நான் சாவதற்கு முன்பே அதை விற்றுப் பணமாக்கி இருக்கலாம். குறைந்தது ரூபாய் 50 லட்சம் கிடைத்திருக்கும். இன்று அதற்கு மார்க்கெட் விலை ஒரு கோடிக்கு மேல். 

அந்த வீட்டை மகன் பெயருக்கு மாற்றி, பதிவு செய்திருக்கலாம். ஆனால் ஏனோ, நான் அதை செய்யவில்லை. என் கண் முன்னே கஷ்டப்படும் உறவினர்களுக்காவது அதை எழுதி வைத்திருக்கலாம். ஆனால் அதையும் செய்யத் தவறி விட்டேன்.

ஆயிரமாயிரம் பேர் என்னைப் போலவே
தங்கள் சொத்துக்களை அப்படியே அனாமதேயமாக விட்டு விட்டுப் போயிருப்பார்கள். கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவற்றை யாராவது அபகரித்துக் கொண்டு விடுவார்கள்.

இதுதான் தலைவிதி என்பதா?

அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறந்தாலும் கூட இவற்றை நான் மீண்டும் அடைய முடியாது. 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...