மொத்தப் பக்கக்காட்சிகள்

காரில் பின் சீட்டில் இருப்பவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டுமா? நாகராஜன் வெள்ளியங்கிரி.

ஒரு கார் விபத்தும், 
இரு மரணங்களும், 
ஒரு போஸ்ட் மார்ட்டமும்.

நாகராஜன் வெள்ளியங்கிரி.

அனைவருக்கும் நிச்சயம் உபயோகமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில், நிறைய விசயங்களைத் தொகுத்து, இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன். 

எனவே, சற்று நீளமாக இருந்தாலும், ஸ்கிப் செய்யாமல் தயவு செய்து முழுப்பதிவையும் படியுங்கள். )
------------------------------------------------------
இந்தியத் தொழில்துறை சாம்ராஜ்ஜியமாகிய டாட்டா குழுமத்தின் முன்னாள் சேர்மனும், பெரும் தொழிலதிபரும், மிகப்பெரிய கோடீஸ்வரரும், 54 வயதே ஆனவருமான, சைரஸ் மிஸ்திரி, சில நாட்களுக்கு முன்னர் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்ததை நிறையப் பேர் அறிந்திருப்பீர்கள்.

அதைப்பற்றிய ஒரு பதிவுதான் இது.

'அதென்ன, பணக்காரன் செத்தா மட்டும் அதுக்கு ஒரு பதிவு ?
நம்ம இந்தியால, சாலை விபத்துல, தினமும் நூத்துக் கணக்கானவங்க இறந்து போறாங்க.. அப்போ அவங்க உசுருக எல்லாம் மதிப்பில்லாததா ? பணக்காரன் உசுரு மட்டும் ஒசத்தியோ ?' அப்படின்னுதான்னே உங்களுக்கு நினைக்கத் தோணுது ?

எல்லோரோட உசுருக்கும் ஒரே மதிப்புதான்.. உயிர் போன பின்னாடி, ஏழை ஆனாலும், கோடீஸ்வரன் ஆனாலும், அந்த உடம்பின் பெயர் 'பிணம்'தான். பிணத்தை ஒன்னு எரிப்பாங்க, இல்லை புதைப்பாங்க.. அதுவரையிலும் ஆடிய அத்தனை    ஆட்டமும், அத்தோடு குளாஸ். 

சாவு ஒன்னுதான் சாசுவதம் மட்டுமல்ல, சமரசமானதும் கூட.  அதனாலதான் இந்தப் பதிவே எழுதப்படுது... பதிவை முழுக்கப் படிச்சா உங்களுக்கு அது புரியும். முழுவதும் படிப்பீங்கன்னு நம்புறேன்.

முதல்ல, அந்த விபத்தைப் பத்திக் கொஞ்சம் சுருக்கமாப் பார்ப்போம்.

கடந்த ஞாயிறன்று ( 4.9.2022), அகமதாபாத்தில் இருந்து மும்பை நோக்கிக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார் சைரஸ் மிஸ்திரி. மும்பையில் இருந்து சுமார் 130 கி.மீ தூரத்தில் உள்ள, பால்கர் மாவட்டத்தின் 'சரோடி நாகா' என்ற இடத்தில், சூர்யா நதியின் மேல் அமைந்துள்ள பாலத்தின் கைப்பிடிச் சுவரில் கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

காரில் பயணம் செய்த நால்வரில், பின் சீட்டில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அவருடைய நண்பர் ஜஹாங்கிர் பண்டோலே இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரை ஓட்டிச் சென்றவர், மும்பையின் புகழ் பெற்ற மகப்பேறு மருத்துவர் டாக்டர் அனஹிதா பண்டோலே. அவர் அருகில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவர், பெரிய தொழிலதிபரும், டாக்டர் அனஹிதாவின் கணவருமான டாரியஸ் பண்டோலே. 

கணவன் மனைவி இருவரும் மிகப் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுத் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிட்சையில் உள்ளனர். டாக்டர் அனஹிதாவின் உடலில் ஏகப்பட்ட எலும்பு முறிவுகள். உயிர் பிழைத்தாலும் அவர் பழையபடி நடமாட முடியுமா என்பது சந்தேகமே. உயிரிழந்த ஜஹாங்கிர், டாரியஸின் சொந்த சகோதரர்தான்.

இப்போ, விபத்துக்குள்ளான அந்தக் காரைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.

அது ஜெர்மன் நாட்டின் தயாரிப்பான, மெர்ஸிடஸ் பென்ஸ் கம்பெனியின் GLC 220 D வகையைச் சேர்ந்த ஒரு சொகுசு கார். 2017 ஆம் ஆண்டு மாடல். ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது. விபத்து ஏற்பட்டால் உயிரைக் காப்பாற்ற ஏழு ஏர் பேக்குகள் கொண்டது. காரின் எடை கிட்டத்தட்ட 1900 - 2000 கிலோ. அவ்வளவு கனமான உடல் கட்டுமானம் கொண்டது. பாதுகாப்புக்கான உலகத்தரத்தில் அதிக பட்ச ரேட்டிங்கான ஐந்து நட்சத்திரங்களைப் பெற்ற வண்டி அது. 

ஷோ ரூமில் அதன் விலை சுமார் 68 லட்சம் ரூபாய். ரிஜிஸ்டிரேசன், இன்ஸூரன்ஸ், ரோட் டேக்ஸ் போன்றவை எல்லாம் சேர்ந்து, சாலைக்கு அது வரும்போது அதன் விலை சுமார் 83 லட்சம் ஆகிறதாம். 

ஏழு ஏர் பேக்குகள் கொண்ட, ஐந்து நட்சத்திரப் பாதுகாப்புத்தரம் பெற்ற, விலை உயர்வான ஒரு காரில் பயணம் செய்தும், அதில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது எப்படி ? 

பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமே இல்லாத, ஜீரோ ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற, விலை குறைவான, சோப்பு டப்பா போன்ற கார்களும் இருக்கின்றன... அவையும் விபத்துக்கு உள்ளாகின்றன..  அதில் சிக்கி இறப்பவர்களும் உண்டு, உயிர் தப்பிப் பிழைப்பவர்களும் நிறைய உண்டு.

அப்போ, 'உயர்ந்த பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார்' என்ற விளம்பரம் எல்லாம் வெறும் வியாபார தந்திரம்தானா ? காரின் விலையை உயர்த்தி விற்பதற்காகச் செய்யப்படும் ஏமாற்று ஜிம்மிக் வேலையா ?

இப்போ, இந்தச் சம்பவம் பற்றிப் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் இதுவரை வெளிவந்த செய்திகளின் அடிப்படையில், நமக்குத் தெரிய வந்துள்ள விசயங்கள் ஏராளம்.... தவறுகள், உதாசீனங்கள், ஒழுங்கீனங்கள் ஏராளம். 
ஆனால், இவை அனைத்துமே இந்த விபத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை.

அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா ?

அப்படிப் பார்க்கும்போது, சில உண்மைகள் நமது முகத்தில் அறைவதைப் போல இருக்கும்.. அதற்கும் தயாராக இருந்து கொள்வது நல்லது.

1) காரை ஓட்டிய அந்தப் பெண் டாக்டர் அதிக வேகத்தில், சுமார் 150 கி்மீ வேகத்துக்கு மேல், காரை ஓட்டியிருக்கிறார்.. 

பொதுவாகவே, 100 கி்மீ வேகத்தை மீறினால் காரின் கட்டுப்பாடு ஓட்டுநரிடம் இருக்காது என்பதை நிறையப்பேர் உணர்வதில்லை. மேலும், இந்திய சாலைகள் அந்த அளவு அதிக வேகத்துக்கு ஏற்றபடி அமைக்கப்படுவதும் இல்லை. 

70 - 80 கி்மீ வேகம் மிகச் சிறப்பு.
 80 - 90 கி்மீ வேகம் ஓரளவு பாதுகாப்பானது.. 
அதிக பட்சமாக 100 கி்மீ வேகம் என்பதை எப்போதும் மீறாமல் இருப்பதே நல்லது.

2) அகமதாபாத்திலிருந்து மும்பையை நோக்கி வரும் ஆறுவழி நெடுஞ்சாலையில், இந்த விபத்து நடந்த சூரியா நதிப்பாலத்துக்கு முன்னதாக சுமார் முக்கால் கி.மீ தூரத்தில் ஒரு வளைவான, ஒரு நீண்ட மேம்பாலம் முடிவடைகிறது.

மேம்பாலத்தை விட்டுக் கீழே இறங்கிய உடன் சாலையில் மும்பையை நோக்கி மூன்று லேன்கள் இருக்கின்றன.... எனவே, மூன்று வண்டிகள் ஒரே நேரத்தில் அந்தச் சாலையில் வேகமாகச் செல்ல முடியும்..  

ஆனால், முக்கால் கி.மீ கடந்த உடன், திடீரென்று மூன்று லேன்களில் ஒன்று முடிந்து போய், இரண்டு லேன்கள் மட்டுமே இருக்கின்றன... அதாவது, சாலை ஓரமாக இருக்கும் லேன் திடீரென்று முடிந்து, மறைந்து விடுகிறது... 

பொதுவாக, இப்படிப்பட்ட சாலைகளில் லேன்களைக் குறைக்க வேண்டி இருந்தால், அது மெல்ல மெல்லத்தான், அதாவது gradual ஆகத்தான் குறைக்கப்படும்.. அதுவும் தூரத்தில் இருந்தே தக்க அறிவிப்புகள், எச்சரிக்கைப் பலகைகள், சிவப்பு விளக்குகள் போன்றவை பொருத்தப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த இடத்தில், மூன்று லேன்கள் இரண்டாக மாறுவதைப் பற்றிய எந்த ஒரு சிறிய அறிவிப்போ, எச்சரிக்கையோ எள்ளளவும் இல்லை...

3) அதை விடக் கொடுமை, அந்த ஓரத்தில் இருந்த லேன் முடிவடையும் இடத்தில்தான் சூரியா நதிப் பாலத்தின் கைப்பிடிச் சுவர் துவங்குகிறது... ஒரு லேனின் அகலத்துக்கு அந்தக் கைப்பிடிச் சுவர் சாலையின் குறுக்கே வந்து, சாலையில் நீள வாக்கில் செல்கிறது.

அப்படி ஒரு பாலம் இருப்பதைப் பற்றியோ, அதன் கைப்பிடிச்சுவர் சாலையின் குறுக்கே பத்தடிக்கு மேல் நீண்டிருப்பதைப் பற்றியோ எந்த விதமான அறிவிப்பும், எச்சரிக்கையும் அங்கு இல்லை.

மேலும் சிறிது காலத்துக்கு முன்பு,  ஒரு கார் அந்தச் சுவரில் மோதிப்  பறந்து போய், அந்த ஆற்றுக்குள்ளேயே விழுந்து விட்டதாக ஒரு செய்தி கூறுகிறது. ஆனால் அதன் முழு விவரம் சரி வரத் தெரியவில்லை.

4)  லேன் டிசிப்ளின் என்ற சாலை விதிகளைப் பெரும்பாலும் யாருமே கடைப்பிடிப்பதில்லை. கனமான டிரக்குகள், லாரிகள் போன்ற, மெதுவாகச் செல்லும் வாகனங்கள் சாலையின் இடது லேனிலும், வேகமாகச் செல்லும் கார்கள் போன்ற வாகனங்கள் வலது லேனிலும் செல்ல வேண்டிய நிலையில், லாரிகள், டிரக்குகள் போன்ற வண்டிகள் பிடிவாதமாக சாலையின் வலது லேன்களில் செல்வதை சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிகிறது...

மேலும் வலது புற லேன் என்பதுதான் ஓவர் டேக் செய்ய உபயோகிக்க வேண்டிய ஒன்று என்பதையும் யாரும் பொருட்படுத்துவதில்லை. வண்டிகளின் இடது புறம், வலது புறம் என்று மனம் போன போக்கில் ஓவர் டேக் செய்கிறார்கள்.

சைரஸ் மிஸ்திரி பயணம் செய்த காரிலும் அந்த டாக்டர், இடது புறமாகத்தான் தனக்கு முன்பு சென்ற வாகனத்தை ஓவர் டேக் செய்திருக்கிறார்.

5) இடது புறத்தில் வேகமாக வண்டியை ஓவர் டேக் செய்து கொண்டு போன அதே நேரத்தில், இடது புறம் இருந்த லேனும் திடீரென்று (ஆங்கிலத்தில் abrupt ஆக) முடிந்து விட, அவர் சென்ற வேகத்தில், என்ன செய்வதென்று யோசிக்கவோ, பிரேக் பிடிக்கவோ அவருக்கு  நேரமில்லாமல், கண்ணிமைக்கும் நேரத்தில் கார் பாலத்தின் கைப் பிடிச்சுவரில் மிக வேகமாக மோதி இருக்கிறது.

6) இந்தப் பாயிண்ட்தான் இந்தப் பதிவிலேயே மிக மிக முக்கியமானது.

காரில் அப்போது பயணித்த நால்வரில், டிரைவர் சீட்டில் இருந்த டாக்டரும், அவருக்குப் பக்கத்து சீட்டில் அமரந்திருந்த டாக்டரின் கணவரும், சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்கள்..

ஆனால் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரியும், ஜஹாங்கிர் பண்டோலேயும் சீட் பெல்ட் அணியவில்லை...

காரில் ஏழு ஏர் பேக் என்ன, எழுபது ஏர் பேக் இருந்தாலும், அவை அனைத்துமே துணைப் பாதுகாப்புக் கருவிகள்தான்.

முதன்மையான பாதுகாப்புக் கருவி சீட் பெல்ட்தான். சீட் பெல்ட் அணியாவிட்டால், ஏர் பேக்குகள் வேலை செய்யாது... காரணம் ஏர் பேக்குகள் இயங்குவதே, சீட் பெல்ட் வழியாக வரும் சிக்னல் மூலமாகத்தான். 

மேலும், காரின் பின்னிருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களில் நூற்றுக்குத் தொன்னூறு சதவீதம் பேர் சீட் பெல்ட்டை அணிவதில்லை. காரணம், கார் விபத்து ஏற்பட்டால், முன்னிருக்கையில் இருப்பவர்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும், எனவே அவர்கள் சீட் பெல்ட் அணிந்தால் போதும், தாங்கள் அணிய வேண்டியதில்லை என்ற பெரும்பாலானோரின் தவறான புரிதல்தான்.

ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால், காராக இருந்தாலும் சரி, இருசக்கர வாகனமாக இருந்தாலும் சரி, ஒரு விபத்து ஏற்படும்போது அந்த வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதை நிறையப் பேர் உணர்வதில்லை.

விபத்து ஏற்படும்போது, காரின் பின்னிருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் அமர்ந்திருப்பவர்கள் காரின் வேகத்தால் உருவான kinetic energy ஆல் , மிக வேகமாகக் காரின் முன் பகுதிக்குத் தூக்கி வீசப்படுவார்கள்.. 

விபத்தில் கார் மோதும் கோணத்தைப் பொருத்து, அவர்கள் காரின் முன் இருக்கையின் பின்பகுதி, காரின் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களின் மேல், காரின் முன் கண்ணாடியின் மேல், காரின் மேல்பகுதி எனப் பல இடங்களுக்குத் தூக்கி வீசப்படும் வாய்ப்பு மிக மிக அதிகம்.. 

அதுவும் kinetic energy உடன், அவர்களுடைய உடல் எடையால் உருவாகும் potential energy யும் உடன், சேர்ந்து கொள்ள, அவர்கள் மோதும் வேகத்தின் எடை பல நூற்றுக்கணக்கான கிலோவாக இருக்கும்..

அதனால் அவர்களுடைய உடலின் பல பாகங்களிலும் மிகப் பலத்த படு காயங்களும், multiple fracture என்று சொல்லக் கூடிய பல எலும்பு முறிவுகளும் ஏற்பட வாய்ப்பு மிக மிக அதிகம்.. அதனால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.
 

இந்த விபத்தில், காரில்  பின்னிருக்கையில் அமர்ந்தவர்கள் மோதியதில், முன்னிருக்கையில் இருந்த adjustable head rest என்று சொல்லக் கூடிய, இருக்கையின் தலைப் பகுதி உடைந்து தெரித்துத் தனியே விழுந்து விட்டது... கடினமான இருக்கையே அந்த பலமான அடியில் தெரித்து விழுந்திருக்கிறது என்றால், வெறும் எலும்பும் சதையும் கொண்டு  உருவான மனிதனின் உடம்பு எம்மாத்திரம் ?

கோடீஸ்வரரான சைரஸ் மிஸ்திரியின் உயிரற்ற உடலும், ஜஹாங்கிர் பண்டோலேயின் உடலும், சாலை ஓரத்தில் இருந்த சேறு நிறைந்த புல் தரையின் மேல் கேட்பாரற்று அனாதையாகக்  கிடந்திருந்ததைப் பார்த்த போது மனசுக்கு மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது.

பதிவின் இறுதியாக, போஸ்ட் மார்ட்டத்தின் முடிவாக, நாம் அனைவரும் உணர வேண்டிய விசயங்கள் என நான் நினைக்கும் சிலவற்றைக் கீழே சுருக்கமாகத் தருகிறேன்...

1) எவ்வளவுதான் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக இருந்தாலும், அது இரும்பு எஃகால் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும் கூட, நம்முடைய பாதுகாப்பு நம்மிடம் மட்டுமே இருக்கிறது...

அது, அளவான வேகத்தில், நிதானமாக வண்டியை ஓட்டுவது மட்டுமே.

2) காரில் பயணிக்கும் அனைவருமே தவறாமல் சீட் பெல்ட் அணிவது நிச்சயம் உயிரைக் காக்கும்.

3) சாலை விதிகளை, குறிப்பாக லேன் ஒழுக்கத்தை, ஒவ்வொரு வாகன ஓட்டியும் தவறாமல் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

4) எந்த வாகனத்தையும், அதனுடைய இடது புறத்தில் ஓவர் டேக் செய்யாமல், வலது புறத்தில் மட்டுமே ஓவர் டேக் செய்வது மட்டுமே பாதுகாப்பானது.

இன்னும் இது போல உங்களுக்குத் தோன்றக் கூடிய விசயங்கள் எதுவாகினும், உங்களுடைய கமெண்டுகளில் தெரியப்படுத்துங்கள். நானும் அவற்றை அறிந்து கொள்கிறேன்.

நாகராஜன் வெள்ளியங்கிரி.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...