வளர்ச்சிப் பாதையில் சென்னை குடியிருப்பு ரியல் எஸ்டேட்
கிரெடாய் ஆய்வு அறிக்கையில் தகவல்
~ வீடுகள் முன்பதிவு மற்றும் வாங்குபவர் எண்ணிக்கை அதிகரிப்பால்
இந்த ஆண்டு துவக்கம் நேர்மறையான வளர்ச்சியை காட்டுகிறது ~
சென்னை, 30 ஏப் 2025: சென்னையில் குடியிருப்பு வீடுகளுக்கான
ரியல் எஸ்டேட் துறை சிறப்பான வளர்ச்சி அடைந்து வருவதாக நடப்பு நிதி ஆண்டுக்கான
முதல் காலாண்டு அறிக்கையில் கிரெடாய் சென்னை தெரிவித்துள்ளது. சமீபத்திய
புள்ளிவிவரங்கள் இந்த துறை நல்ல வளர்ச்சி அடைந்து வருவதோடு, வீடு வாங்குபவர் இடையே நல்ல நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதையும், வீடுகளுக்கான முன் பதிவுகளில் சிறப்பான வளர்ச்சி, நிலையான விற்பனையையும்
காட்டுகிறது.
2025ம் ஆண்டின் முதல் காலாண்டில் சென்னையில்
பதிவுசெய்யப்பட்ட குடியிருப்பு வீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 8,042 ஆக இருந்தது, இது கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டை விட 88 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில் இது 4,286 வீடுகளாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் (7,218 வீடுகள்) 11 சதவீதம் அதிகமாகும். இதில் குறிப்பிடத்தக்க வகையில், இதில் 92 சதவீத முன்பதிவுகள் கிரெடாய் சென்னை உறுப்பினர்களின் கட்டுமான
நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில்
6,346 ஆக இருந்தது, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 17 சதவீதம்
அதிகரித்து 7,412 ஆக உள்ளது.
விற்பனையை பொறுத்தவரை நிலையான வளர்ச்சி கண்டு
வருகிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 2,983ஆக இருந்த வீடுகள் விற்பனை நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 3,783ஆக அதிகரித்து உள்ளது. இது காலாண்டுக்கு காலாண்டு வளர்ச்சி அடிப்படையில் 7
சதவீதமும், ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில் 27 சதவீதமும்
அதிகரித்து உள்ளது. இதில் 80 சதவீதம் கிரெடாயில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களை
சேர்ந்ததாகும்.
நிறைவடையும் தருவாயில் உள்ள அல்லது பயன்படுத்தத்
தயாராக உள்ள வீடுகளை வீடு வாங்குவோர் அதிகம் விரும்புகிறார்கள். இது வீடு வாங்குபவர்களின் விவேகமான
எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும்
சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு, மத்திய அரசின் திருத்தப்பட்ட
வருமான வரி உச்சவரம்பு ஆகியவை முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் இடையே மிகுந்த
உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 61 புதிய குடியிருப்பு
திட்டங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 78ஆக
இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது புதிய குடியிருப்பு திட்டங்களுக்கான பதிவு என்பது
சற்று குறைவாக உள்ளது.
சென்னை நகரைப் பொறுத்தவரை தெற்கு புறநகர் பகுதியில் 4,309 வீடுகளும், வடக்கு புறநகர் பகுதியில் 1518 வீடுகளும் பதிவு
செய்யப்பட்டு உள்ளன. மேற்கு மற்றும் மத்திய சென்னை நிலையான பங்களிப்பை வழங்கி உள்ளது.
இதேபோல் தமிழகம் முழுவதும், கட்டிடங்கள் மற்றும் லேஅவுட்கள் இரண்டிலும் மொத்த
திட்டப் பதிவுகள் மாதந்தோறும் படிப்படியாக உயர்ந்துள்ளன. நடப்பு நிதி ஆண்டின் முதல்
காலாண்டில் மொத்தம் 1,436 திட்டங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மொத்த திட்டங்களில் தெற்கு புறநகர் பகுதியில் 31 சதவீதமும், சென்னை நகரில் 56 சதவீத வீடுகளும்
பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக மேம்பட்ட
உள்கட்டமைப்பு, புதிய மெட்ரோ வழித்தடங்கள் மற்றும் பரந்தூர், மீஞ்சூர், செங்கல்பட்டு மற்றும்
ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட வளர்ந்து வரும் பகுதிகள் காரணமாக இதன் வளர்ச்சி விகிதம்
அதிகரித்து உள்ளது. ஒருங்கிணைந்த டவுன்ஷிப் மற்றும் பரவலாக்கப்பட்ட திட்டமிடல்
ஆகியவை பிரபலமடைந்து வருவதால், இந்த இடங்கள் வரவிருக்கும் காலாண்டுகளில் இன்னும்
வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 2025 நிலவரப்படி, முடிக்கப்பட்ட திட்டங்களில்
விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 7,872ஆக இருந்தது. இதில் கிரெடாய் உறுப்பினர்களின் வீடுகள் 5,937 ஆகும். மேலும் நடப்பு நிதி
ஆண்டின் முதல் காலாண்டில் தமிழகம் முழுவதும் 84 குடியிருப்பு திட்டங்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 61 சதவீதம் கிரெடாய் உறுப்பினர்களுக்கு சொந்தமான
திட்டங்கள் ஆகும். மாநிலத்தில் மொத்தம் 9,480 வீடுகள் பதிவு செய்யப்பட்டு
உள்ளன. இதில் 90 சதவீதம் கிரெடாய் கட்டுமான நிறுவனங்களின் திட்டங்கள் ஆகும். இது
கடந்த நிதி ஆண்டின் 4வது காலாண்டுன் ஒப்பிடுகையில் 34 சதவீத அதிகரிப்பையும், முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 24 சதவீத அதிகரிப்பையும் காட்டுகிறது. மாநில
அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் ரியல்
எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இது குறித்து கிரெடாய் சென்னை தலைவர் முகமது அலி கூறுகையில், புறநகர் உள்கட்டமைப்பு மற்றும்
வளர்ச்சிப் பணிகளில் மாநில அரசு அதிக கவனம் செலுத்துவதன் காரணமாக மக்களிடையே
இந்தப் பகுதிகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. இதன் காரணமாக தற்போது ரியல்
எஸ்டேட் துறை வளர்ச்சி என்பது நம்பிக்கைமிக்கதாக இருப்பதை நாங்கள் பார்த்து
வருகிறோம் என்று தெரிவித்தார்.
கிரெடாய் சென்னை செயலாளர் அசலம் பி முகமது கூறுகையில், சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு, மத்திய அரசின் திருத்தப்பட்ட
வருமான வரி விகிதம் ஆகியவை முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு ஒரு உத்வேகத்தை
அளித்துள்ளது. இதே வேகம் அடுத்த காலாண்டிலும் தொடரும் என்று நாங்கள்
எதிர்பார்க்கிறோம், குறிப்பாக உள்கட்டமைப்பு சார்ந்த இடங்கள்
முதலீட்டாளர்களையும், வீடு வாங்குபவர்களின் ஆர்வத்தையும் ஈர்க்கின்றன என்று
தெரிவித்தார்.
கிரெடாய் சென்னை வெளியிட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கை, சென்னையின் குடியிருப்பு சந்தை சிறப்பான வளர்ச்சி
கண்டுவருதையும், மேலும் கிரெடாய் உறுப்பினர்கள்
தொடர்ந்து முன்னணியில் இருந்து வருவதையும் காட்டுகிறது.