வெளிநாட்டு மோகத்தால் வந்த வினை. இதுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது

♥( உண்மை நிகழ்வு)
அவள் கிராமத்து பெண். அதிகம் படிக்காதவள். வயது 46-ஐ கடந்துவிட்டது.

♥கணவருக்கு 56 வயது. அவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு முன்பே, 25 வயதில் வெளிநாடு சென்றவர் திருமணமாகி 3 பிள்ளைகளுக்கு தந்தையான பிறகும் இப்போதும் அங்குதான் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

♥அவர் கடுமையான உழைப்பாளி. 'ஓவர் டைம்' வேலையும் பார்த்து, மாதந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் ஊரில் வசிக்கும் மனைவிக்கு அனுப்பி வைத்துவிடுவார். 50 வயதை நெருங்கும்போதே அவரது உடலில் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிட்டன. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை உண்டு.

♥கணவர் மாதந்தோறும் அனுப்பும் பணத்தை மனைவி நிலத்தில் முதலீடு செய்து கொண்டிருந்தாள். அந்த சுற்றுவட்டார கிராமத்தில் அவசர தேவைக்கு நிலத்தை விற்பவர்கள் அந்த பெண்ணைத்தான் அணுகுவார்கள். அவளும் குறைந்த விலைக்கு பேரம் பேசி பணத்தை கொடுத்து நிலத்தை வாங்கிவிடுவாள். அதனால் கணவர் உழைத்து அனுப்பும் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்கிறாள் என்ற நல்ல பெயர் அவளுக்கு உண்டு.

♥அவளது கணவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பே, 'என்னால் முன்பு போல் உழைக்க முடியவில்லை. உடல் நிலையும் சரியில்லை. அதனால் சொந்த ஊர் திரும்பிவிடலாம் என்று நினைக்கிறேன். நீ வாங்கியிருக்கும் நிலத்தில் ஒன்றிரண்டை விற்று, சொந்த ஊரிலே ஏதாவது சுயதொழில் செய்து மீதமுள்ள காலத்தை குடும்பத்தோடு செலவிட ஆசைப்படு கிறேன்' என்று மனைவியிடம் தனது எண்ணத்தை சொன்னார்.

♥அவர் அப்படி சொல்லும்போதெல்லாம் அவளும் 'சரி சரி' என்பாள். ஆனால் அவ்வப்போது கையில் இருக்கும் பணத்தை விட அதிகமான தொகைக்கு புதிதாக ஏதாவது ஒரு வீட்டையோ, நிலத்தையோ வாங்கிவிடுவாள். கையிருப்பு தொகை போக சில லட்சங்கள் கடனாகிவிடும். அந்த தொகையை உறவினர்கள் யாரிடமாவது கடனாக வாங்கி நிலத்து உரிமையாளருக்கு கொடுப்பாள். கொடுத்துவிட்டு கணவரிடம், 'அந்த கடன் தீரும் வரை நீங்கள் அங்கேயே இருந்து வேலையை செய்யுங்கள்' என்று கூறிவிடுவாள்.

♥இப்படி பல வருடங்களாக மீண்டும் மீண்டும் நிலத்தை வாங்கி கணவரை நிரந்தரமாக கடன்காரராகவே ஆக்கி சொந்த ஊர் திரும்பும் அவரது ஆசையை நிராசையாக்கிக் கொண்டிருந்தாள்.

♥தனது மருமகன் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற ஆசையில் இருப்பதும், அதை தடுக்கும் விதத்தில் தனது மகள் செயல்படுவதும் மாமனாருக்கு தெரிந்தது. அதனால் ஆத்திரமடைந்த அவர், 'உனக்கு பேராசை பிடித்துவிட்டது. சொத்து வாங்குவதிலே குறியாக இருக்கிறாய். மருமகன் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று விரும்புவதை நீ கண்டுகொள்வதே இல்லை. நீ இப்படி குதர்க்கமாக நடந்துகொள்ள என்ன காரணம்?' என்று மகளிடம் கேட்டார்.

♥அதற்கு அவள் சொன்ன பதில் அவரை நிலை குலைய செய்துவிட்டது.

♥''நான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று முதலிலே உங்களிடம் சொன்னேன். அதை காது கொடுத்து கேட்காமல் கட்டாயப்படுத்தி என்னை திருமணம் செய்து வைத்தீர்கள். திருமணமான இரண்டாவது மாதமே வெளிநாடு சென்ற என் கணவர், இரண்டு வருடம் கழித்து வந்தார். இரண்டு மாதங்கள் என்னோடு இருந்தார். நான் தாய்மை அடைந்தேன்.

♥அப்போதே அவரிடம், 'இனி வெளிநாடு செல்ல வேண்டாம். கொஞ்சமாக சம்பாதித்தாலும் போதும் என்னோடு இங்கேயே இருங்கள்' என்று மன்றாடினேன். அவர் கேட்கவில்லை. மீண்டும் சென்றார். இப்படி 21  வருடங்களில், சில மாதங்கள் மட்டுமே என்னோடு வாழ்ந்தார். அவரால் நான் மூன்று பிள்ளைகளை பெற்றதைவிட வேறு எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை.

♥பெண்களுக்கும் ஆசை இருக்கும் என்பதை அவர் ஒருபோதும் உணர்ந்ததில்லை. அவர் ஊருக்கு வரும் ஒவ்வொரு தடவையும் நானும் ஒரு பெண்தான் என்பதை உணர்த்தி, அவரை சொந்த ஊரிலே தங்க வைக்க எப்படி எல்லாமோ முயன்றேன். நான் சொன்னது எதையும் அவர் கேட்கவில்லை. பணம்.. பணம்.. என்று வெளிநாட்டை நோக்கி ஓடினார். எங்களையும் உடன் அழைத்து செல்லுங்கள் என்றேன். அதையும் கேட்கவில்லை.

♥ஒரு பெண் திருமணமானதில் இருந்து 40 வயது வரை தான் வாழ்க்கையை அனுபவிக்க துடிப்பாள். அப்போதெல்லாம் உங்கள் மருமகன் வெளிநாட்டிலேயே இருந்துகொண்டு என்னை இங்கே தவிக்கவைத்துவிட்டார். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்து என்னை எட்டிப்பார்த்துவிட்டு சென்றுகொண்டிருந்தார். இப்போது அவருக்கு வயது ஆகிவிட்டது. உடல் நலமும் குன்றிக் கொண்டிருக்கிறது. இனி அவர் இங்கே வந்து என்ன பலன்? கானல் நீராகிப்போன என் இளமையையும், வாழ்க்கையையும் அவரால் மீட்டுத்தரவா முடியும். நோயாளியான அவர் இனி இங்கு வந்தால் எனக்கு சுமையாகிவிடுவார். எனது சுதந்திரமும் பறிபோய்விடும். நாங்கள் இருவரும் அடிக்கடி சண்டைபோடும் சூழ்நிலை உருவாகிவிடும்.

♥அந்த தொந்தரவுகளை எல்லாம் தவிர்ப்பதற்காகத்தான், அவரை அங்கேயே முடக்கிப்போட நினைத்து, அவரது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி அவரை கடன்காரராகவே வைத்திருக்கிறேன். அவர் காலம் முழுக்க அங்கேயே இருக்கட்டும். என்னை பொறுத்தவரையில் அவர் எனக்கு பணம் தரும் 'ஏ.டி.எம்' மெஷின் மட்டும்தான்..'' என்று மகள் சொல்லச் சொல்ல அவருக்கு வியர்த்து வழிந்தது. என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை!

♥மகளின் பதிலில் இருந்த வேதனையை உணர்ந்து, அதில் தானும் ஒரு விதத்தில் குற்றவாளிதான் என்பதை புரிந்து உறைந்துபோய் நின்றிருந்தார்.

♥வெளிநாட்டு மோக ஆண்களே... கருத்தில்கொள்ள வேண்டிய விஷயமல்லவா இது..!!!
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

மொத்தப் பக்கக்காட்சிகள்

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உன் வாழ்க்கைக்கு நீயே பொறுப்பு! - ராம்குமார் சிங்காரம்

உன் வாழ்க்கைக்கு நீயே பொறுப்பு! - ராம்குமார் சிங்காரம் ஆங்கிலத்தில் ஒரு கேள்வி உண்டு. 'ஆர் யூ யேர்ன் ஃபார் யுவர் பிரட்?' (Are you ea...