மொத்தப் பக்கக்காட்சிகள்

காா்த்திகை மாதம் இரண்டாவது சோமவாரம் திருநாள் சிவபெருமானாரே தன் கைப்பட எழுதிய கடிதம் Tiruvannamalai

காா்த்திகை மாதம் இரண்டாவது சோமவாரம் திருநாள்

சிவபெருமானாரே தன் கைப்பட எழுதிய கடிதம்
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸

திருவாலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரம்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

திருவாலவாயுடையார் (சிவபெருமானார்)  காலத்தை கடந்த பரம்பொருள். பதினொன்றாந் திருமுறையில் முதலில் உள்ள திருமுகப்பாசுரம் அருளப்பட்டகாலம் ஏறக்குறைய 8 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இறைவரே எழுதியதால் திருமுகம் எனவும், பாடலாக அமைந்துள்ள காரணத்தால் 'பாசுரம்' எனவும் திருமுகப்பாசுரம் ஆயிற்று.

பாணபத்திரர் எனும் சிறந்த சிவ பக்தர் மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரப் பெருமானாரை அன்றாடம் முப்பொழுதும் யாழினால் பாடித் துதித்து வந்தார்.

இவருக்கு பொருள் கொடுக்க வேண்டும்.  இறைவர் தாமே கொடுக்காமல், கீழ்வரும் கடிதத்தை (பாசுரத்தை) எழுதிப் பாணப்பத்திரரிடம் கொடுத்து, சேரமான் பெருமாள் நாயனார் எனும் மிகச்சிறந்த சிவபக்தரிடம் அனுப்புகிறார்.

இக்கடிதத்தை 'பரிந்துரை கடிதம்' எனலாம். சிவபெருமானாரே பொருள் கொடுக்காமல் சேரமானிடம் அனுப்பியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1) சிறந்த சிவபக்தர்கள் இருவரையும் சந்திக்க வைக்க வேண்டும் எனும் உயர்ந்த நோக்கம்.

கண்ணுதலாய்க் காட்டாக்கால் காண்பார் யார் - அப்பர்

இறைவர் (கண்ணுதல்) காட்டினால்தான் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியும் என்பது திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவாக்கு ஆகும்.

2) சேரமானிடம் உள்ள பொருட்கள் யாவும் நல்ல வழியில் வந்தவை அவை நல்ல வழியில் பயன்பட வேண்டுமென இறைவர் எண்ணுகிறார்.

ஆம்!  இதுதான் உண்மை. பெரும் பணக்காரர்கட்குத் தருமம் செய்யும் எண்ணமே வருவதில்லை.  காரணம் அவர்களிடம் உள்ள செல்வம் நல்ல வழியில் வந்ததில்லை.  அதனால் அச்செல்வம் நல்ல வழியில் செலவழிக்கப்படாது எனும் உண்மையை நாம் உணர வேண்டும்.

திருமுகப் பாசுரம்

'மதிமலி புரிசை மாடக் கூடல்' 
'பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகு' 
'அன்னம் பயில் பொழில் ஆலவாயில்' 
'மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்' 
'பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு' 
'உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்' 
'குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்' 
'செருமா உகைக்குஞ் சேரலன் காண்க' 
'பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்' 
'தன்போல் என்பால் அன்பன் தன்பால்'
'காண்பது கருதிப் போந்தனன்' 
'மாண் பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே'. - *திருவாலவாயுடையார்*

(மதி - சந்திரன்; மலி - தவழுதல்; புரிசை - மதில்; மாடக்கூடல் - மதுரை;பதி -  தலம்; பால்நிற வரிச்சிறகு - பால் போன்ற வெண்ணிற வரிகளையுடைய சிறகு; அன்னம் - அன்னப்பறவை; பயில் - வாழ்தல்; பொழில் - நீர்நிலை; ஆலவாய் - மதுரை மாநகரில் உள்ள சிவாலயத்தின் பெயர்; மன்னிய - நிலைபெற்ற; மாற்றம் - சொல்; பருவம் - பருவகாலம்;கொண்மூ -  மேகம்; படி - ஒத்த; ஒருமையின் - ஒருமைப்பட்ட உள்ளம்; உரிமை - கடமை; குரு - அழகு; மாமதி - முழு நிலவு; புரை - ஒத்த; செரு - போர்; மா - குதிரை; உகைக்கும் - செலுத்தும்; சேரலன் சேரமான் பெருமாள் நாயனார்; போந்தனன் - தன்னிடம் வந்தான்; மாண்பொருள் - மிகுந்த பொருள்)

இப்பாசுரத்தின் ஈடிலாப் பெருமை

எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இத்திருமுகம் (கடிதம்) இந்த நூற்றாண்டில் அரசு அலுவலகங்களில் எழுதப்படும் கடிதங்கட்கு முன்மாதிரி (Model of official letters) என்பதை நினைக்கும்பொழுது தமிழ் வேதங்களின் மேன்மையை வியக்கின்றோம்.

பாசுரத்தின் (பாடலின்) முதல் நான்கு வரிகள் விடுநர் (from) யார் என்பதை தெளிவாக கூறுபவை.

சந்திரன் தவழும் அளவிற்கு உயர்ந்த மதில்களை உடைய மாடக்கூடலில் (மதுரை), பால் போன்ற வெண்ணிறச் சிறகுகளை உடைய அன்னப்பறவைகள் வாழும் பொழிலை உடைய ஆலவாய் (ஆலயத்தின் பெயர்) எனும் ஆலயத்தில் நிலைபெற்று விளங்கும் சிவபெருமானாகிய யான் எழுதும் கடிதம்.

அடுத்த நான்கு வரிகள் யாருக்கு (To) எழுதப்பட்டது என்பதைக் கூறுபவை.

பருவக்காலத்து மேகம் போன்று பாவலர்க்கு (சான்றோர்க்கு) ஒருமைப்பட்ட மனத்துடன் உதவுவதைத் தம் கடமையாகக் கொண்டவரும் அழகுடைய முழுநிலவு போன்ற வெண்குடைக் கீழ் குதிரையைச் செலுத்தி அரசாளும் சேர மன்னன் காண்க இக்கடிதத்தை.

(விடுநர், பெறுநர், பொருள் - எனும் பாங்கில் அமைந்துள்ளது).

அடுத்த நான்கு வரிகள் கடிதத்தின் உட்பொருளைக் (subject) கூறுபவை.

பண்பில் உயர்ந்த பாணபத்திரர் என்பவர் உன்னை போல என்பால் அன்பு கொண்டவர் உன்னை காண வருகின்றார். பெரும் பொருள் கொடுத்து அனுப்பிவைப்பாயாக!

இக்கடிதத்தில் (பாடலில்) பாணபத்திரரைச் சேரமானுக்கு அறிமுகப்படுத்தியுள்ள திறம் (வகை) நமக்கெல்லாம் பெரிய பாடம் அல்லவா!

சேரமான், சிவபெருமானார் மீது மிகச் சிறந்த அன்பு கொண்டவர்.  பாணபத்திரரும் அப்படியே என்பதை,

"பாணபத்திரன் தன்போல் என்பால் அன்பன்" என்று மிகச் சாதுரியமாக எழுதியுள்ள பாங்கு அவருக்கே உரியதாகும்

மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே

மிகுந்த பொருள் கொடுத்துப் (வரவிடுப்பதுவே) பாணபத்திரரை அனுப்பிவை என எழுதியதைச் சிந்திப்போம்.

பாணபத்திரர் அன்றாடம் மூன்று வேளையும் இறைவரைப் பண் அமைந்த பாடல்களால் பாடி மகிழ்விப்பார்.  சேரமான் பெருமாள் நாயனார் தம்மிடமே பாணபத்திரரை நிறுத்திக் கொண்டால் பாடல்களைக் கேட்க முடியாமல் போய்விடுமே என்ற காரணத்தால்தான் அப்படி எழுதினார் எனக் கொள்ளலாம்.

சிவபெருமானார் தமிழ் பாடலில் ஆறாத பற்றுடையவர் என்பதை இதனால் நாம் உணரலாம்.

குறிப்பு:-  தம்மையே நம்பியுள்ள அடியவருக்கு இறைவர் செய்யும் உதவிகளை யாரால் அளக்க முடியும்! தேவை நம்பிக்கை தான்.

                               திருச்சிற்றம்பலம்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...