முதலீட்டாளர்களின் குறைகளைத்
தீர்க்க செபியின் சிறப்பு முகாம்! செப். 30, 2026 புதன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி,
சென்னை SEBI
பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், வாரிசுதாரர் உள்ளிட்ட
பிரச்னைகளுக்கு நேரடி உதவி
“அப்பா
வாங்கிய சில பங்குகள் இருக்கின்றன. அவற்றை என் பெயருக்கு மாற்ற வேண்டும். ஆனால்,
எங்கே செல்வது என்று தெரியவில்லை...” என்று நண்பரிடம் புலம்பினார் ராஜன்.
“பங்குகள்
இருக்கிறதா? அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? அப்படியானால் கவலைப்பட வேண்டாம்.
முதலீட்டாளர்களின் இதுபோன்ற பிரச்னைகளுக்கு உதவுவதற்காகவே செபி சிறப்பு முகாம்
நடத்துகிறது” என்றார் நண்பர்.
முதலீடு
செய்வது மட்டுமல்ல; முதலீடு தொடர்பான ஆவணங்கள், பெயர் மாற்றம், வாரிசுதாரர் பதிவு,
பங்குகளை மின்னணு வடிவத்துக்கு மாற்றுதல் போன்ற பணிகளும் சரியாக இருக்க வேண்டும்.
இதற்காக முதலீட்டாளர்களுக்கு நேரடியாக உதவும் வகையில், செபியின் தெற்கு மண்டல
அலுவலகம் சார்பில் “முதலீட்டாளர் உதவி முகாம் – 2026” சென்னையில் நடைபெற
உள்ளது.
சென்னையில் செபியின் முதலீட்டாளர் உதவி முகாம்
செபியின்
தெற்கு மண்டல அலுவலகம் ஏற்பாடு செய்யும் இந்த முகாம் செப்டம்பர் 30, 2026
புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இடம்:
செபி தெற்கு மண்டல அலுவலகம்,
ஓவர்சீஸ் டவர்ஸ், 7-வது தளம்,
756-L, அண்ணா சாலை, சென்னை – 600002.
செபியின்
தெற்கு மண்டல அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ முகவரி மற்றும் தொடர்பு விவரங்களும் செபி
இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. (Securities
and Exchange Board of India)
என்னென்ன பிரச்னைகளுக்கு உதவி கிடைக்கும்?
இந்த
முகாமில் பங்குகள், பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தொடர்பான பல்வேறு
சேவைகள் குறித்து முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
|
முதலீட்டாளர் பிரச்னை |
கிடைக்கும் உதவி |
|
பங்குகள்,
பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான சேவைகள் |
பதிவு
செய்யப்பட்ட பரிமாற்ற முகவர்களிடம் தொடர்புடைய சேவைகள் |
|
வாரிசுதாரர்
பதிவு |
வாரிசுதாரர்
விவரங்களைப் புதுப்பித்தல் |
|
பெயர் மாற்றம் |
சரியான
பெயர் விவரங்களைப் பதிவு செய்தல் |
|
பங்குகளை
வாரிசுக்கு மாற்றுதல் |
உரிமை
மாற்றம் தொடர்பான வழிகாட்டுதல் |
|
காகிதப்
பங்குகள் |
மின்னணு
வடிவத்துக்கு மாற்றுவதற்கான உதவி |
|
குறைகள் |
முதலீட்டாளர்
குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகாட்டுதல் |
|
வாடிக்கையாளர்
விவரங்கள் |
கே.ஒய்.சி.
உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பித்தல் |
செபியின்
வழிகாட்டுதல்படி, குறிப்பாக காகித வடிவில் பங்குகளை வைத்திருப்பவர்கள் தங்களுடைய
பான், தொடர்பு விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், வாரிசுதாரர் தேர்வு உள்ளிட்ட
தகவல்களைப் புதுப்பித்திருப்பது முக்கியம்.
வாரிசுதாரர் பதிவு ஏன் முக்கியம்?
பல
ஆண்டுகளுக்கு முன்பு பங்குகளில் முதலீடு செய்தவர்கள், “அப்போது வாங்கிய பங்குகள்
இருக்கின்றன; ஆனால் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை” என்று
இருப்பார்கள்.
குறிப்பாக
முதலீட்டாளர் இறந்துவிட்டால், அந்தப் பங்குகளை சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மாற்றும்
நடைமுறை சிக்கலாகலாம். வாரிசுதாரர் விவரங்களைச் சரியாகப் பதிவு செய்து
வைத்திருப்பது இந்த நடைமுறையை எளிதாக்க உதவும் என்று செபி விளக்குகிறது.
குறை இருந்தால் என்ன செய்வது?
முதலில்
சம்பந்தப்பட்ட நிறுவனம், பதிவு செய்யப்பட்ட பரிமாற்ற முகவர் அல்லது தொடர்புடைய
சேவை நிறுவனத்திடம் பிரச்னையைத் தெரிவிப்பது நடைமுறை. தீர்வு கிடைக்கவில்லை
என்றால், செபியின் SCORES இணையதளம் (scores.sebi.gov.in) மூலம் குறையைப் பதிவு செய்யலாம்.
இது பங்குச்சந்தை தொடர்பான முதலீட்டாளர் குறைகளைத் தீர்ப்பதற்கான செபியின் இணையவழி
தளமாகும்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது!
இந்த
முகாமுக்குச் செல்லும் முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள பங்கு சான்றிதழ்கள்,
கணக்கு விவரங்கள், அடையாள ஆவணங்கள், கே.ஒய்.சி. ஆவணங்கள், வாரிசுதாரர் தொடர்பான
ஆவணங்கள், நிறுவனத்துடன் ஏற்கெனவே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் போன்ற
தொடர்புடைய ஆவணங்களை எடுத்துச் செல்வது பயனுள்ளதாக இருக்கும்.
முதலீடு
செய்துவிட்டோம் என்பதுடன் நமது பொறுப்பு முடிந்துவிடுவதில்லை. முதலீட்டின் உரிமை,
ஆவணங்கள், வாரிசுதாரர், கே.ஒய்.சி. உள்ளிட்ட விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை
அவ்வப்போது சரிபார்ப்பதே முதலீட்டாளர் பாதுகாப்பின் முக்கியமான பகுதி.
குறிப்பு: குறிப்பிடப்பட்டுள்ள முகாமுக்கு
முன்பதிவு செய்யக் குறியீட்டு சதுரத்தைப் பயன்படுத்துமாறு முதலீட்டாளர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
@@@