மூலதன ஆதாய வரியைச்
சட்டபூர்வமாகச் சேமிப்பது எப்படி? Capital Gain Tax
வீடு வாங்குதல், அரசு அங்கீகரித்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்தல் மூலம் வரிச்சுமையைக் குறைக்கலாம்!
Tax Guru எல்.கிரி பாபு, ஆடிட்டர், www.gbfs.in, Ph - +91 98438 88007
சென்னையைச் சேர்ந்த
ராமசாமி, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சத்திற்கு ஒரு நிலத்தை
வாங்கியிருந்தார். தற்போது அந்த நிலத்தின் மதிப்பு ரூ.80 லட்சமாக உயர்ந்ததால் அதை
விற்பனை செய்தார். இதனால் அவருக்கு கணிசமான லாபம் கிடைத்தது. ஆனால், அந்த
லாபத்திற்கு எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கவலை ஏற்பட்டது.
அவருடைய நண்பர்
ஒருவர், "நிலத்தை விற்று லாபம் கிடைத்தவுடன் அவசரமாக வரி
செலுத்திவிடாதீர்கள். வருமான வரிச் சட்டத்தில் உள்ள சில சலுகைகளைப் பயன்படுத்தி,
அந்த வரியைக் குறைக்க முடியும். புதிய வீடு வாங்குவது அல்லது குறிப்பிட்ட அரசு
அங்கீகரித்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது போன்ற வழிகள் உள்ளன" என்று
ஆலோசனை கூறினார்.
ராமசாமி வரி
ஆலோசகரை அணுகி, தனக்குப் பொருத்தமான வழியைத் தேர்ந்தெடுத்தார். இதன் மூலம்
சட்டப்படி கிடைக்கக்கூடிய வரிச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டார்.
இந்தச் சம்பவம்
நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். சொத்தை விற்று லாபம் பெறுவது மட்டுமல்ல, அந்த மூலதன
ஆதாயத்தின் மீது விதிக்கப்படும் வரியைச் சரியாகத் திட்டமிடுவதும் செல்வத்தைப்
பாதுகாப்பதில் முக்கியமானதாகும்.
1. மூலதன ஆதாயம் என்றால் என்ன?
ஒருவர் வாங்கிய
சொத்தை அதன் வாங்கிய விலையை விட அதிக விலைக்கு விற்றால் கிடைக்கும் லாபம், மூலதன
ஆதாயம் (Capital Gain) எனப்படுகிறது.
உதாரணமாக, ஒருவர்
ரூ.20 லட்சத்திற்கு வாங்கிய நிலத்தை ரூ.80 லட்சத்திற்கு விற்றால், விற்பனைச்
செலவுகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட கழிவுகளைக் கணக்கில் கொண்ட பிறகு கிடைக்கும்
லாபம் மூல தன ஆதாயமாகும்.
நிறுவனப் பங்குகள்,
பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், நிலம், வீடு
போன்ற சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் இத்தகைய ஆதாயம் கிடைக்கலாம்.
2. குறுகியகால மற்றும் நீண்டகால ஆதாயம்
ஒரு சொத்தை எவ்வளவு
காலம் வைத்திருந்தோம் என்பதைப் பொறுத்து அதன் ஆதாயம் குறுகிய கால அல்லது நீண்ட கால
ஆதாயமாகப் பிரிக்கப்படுகிறது.
பட்டியலிடப்பட்ட
பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த ஈக்விட்டி
ஃபண்டுகளை 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் நீண்ட கால ஆதாயமாகக் கருதப்படும்.
நிலம் மற்றும் கட்டடங்களை 24 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் நீண்டகால ஆதாயமாகும்.
ஆபரண தங்கம், தங்க கட்டி, தங்க நாணயம், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவற்றுக்கு 24
மாதக் காலவரம்பு பொருந்தும். கோல்டு இ.டி.எஃப்க்கு 12 மாதங்களாகும்.
நீண்ட கால
ஆதாயத்திற்கு பல்வேறு வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால் பங்குகள், தங்கம், வீடு
என ஒவ்வொரு சொத்திற்கும் வரி விதிப்பும் சலுகைகளும் வேறுபடும். எனவே அனைத்திற்கும்
ஒரே விதிமுறையைப் பயன்படுத்த முடியாது.
3. புதிய வீடு வாங்குவதன் மூலம் வரிச்சலுகை
ஒருவர் ஏற்கெனவே
வைத்திருந்த குடியிருப்பு வீட்டை விற்று நீண்டகால ஆதாயம் பெற்றால், அந்த
ஆதாயத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் மற்றொரு குடியிருப்பு வீட்டை வாங்குவதன் மூலம்
வரிச்சலுகை பெறலாம்.
2026 ஏப்ரல் முதல்
நடைமுறைக்கு வந்துள்ள புதிய வருமான வரிச் சட்டத்தின் 82-வது பிரிவின்படி, பழைய
வீட்டை விற்பனை செய்வதற்கு ஓராண்டுக்கு முன்போ அல்லது விற்பனை செய்த இரண்டு
ஆண்டுகளுக்குள்ளோ புதிய வீட்டை வாங்க வேண்டும். புதிய வீட்டைக் கட்டுவதாக
இருந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டும்.
புதிய வீட்டில்
முதலீடு செய்யும் தொகை கிடைத்த ஆதாயத்தைவிடக் குறைவாக இருந்தால், முதலீட்டுக்கு
ஏற்ப பகுதி வரி விலக்கு கிடைக்கும். இந்தச் சலுகைக்கான கணக்கீட்டில் ரூ.10 கோடி
உச்சவரம்பும் உள்ளது.
4. நிலம் அல்லது பங்குகளை விற்று வீடு வாங்குதல்
ஒருவர் நிலம்,
தங்கம் அல்லது பங்குகளை விற்று நீண்டகால ஆதாயம் பெற்றிருந்தாலும், சில
நிபந்தனைகளுடன் புதிய குடியிருப்பு வீட்டில் முதலீடு செய்து வரிச்சலுகை பெறலாம்.
இதற்கு புதிய
வருமான வரிச் சட்டத்தின் 86-வது பிரிவு வழிவகுக்கிறது.
ஆனால் இங்கு ஒரு
முக்கியமான வேறுபாடு உள்ளது. பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும்போது ஆதாயத்
தொகையை முதலீடு செய்வது முக்கியம். அதேசமயம் நிலம் அல்லது பங்குகளை விற்றுப் புதிய
வீடு வாங்கும்போது, பொதுவாக விற்பனைத் தொகை முழுவதையும் முதலீடு செய்ய வேண்டும்.
மேலும், விற்பனை
செய்த நாளில் புதிய வீட்டைத் தவிர வேறு ஒன்றுக்கு மேற்பட்ட குடியிருப்பு வீடுகள்
சொந்தமாக இருக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளும் உள்ளன.
5. மத்திய அரசு அங்கீகரித்த பத்திரங்களில் முதலீடு
நிலம் அல்லது
கட்டடத்தை விற்று நீண்ட கால ஆதாயம் பெற்றவர்கள்,
மத்திய அரசு அங்கீகரித்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வரிச்சலுகை
பெறலாம்.
இதற்குப் புதிய
வருமான வரிச் சட்டத்தின் 85-வது பிரிவு வழிவகுக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை
ஆணையம் மற்றும் ஊரக மின்மயமாக்கல் கழகம் போன்ற தகுதியான நிறுவனங்கள் வெளியிடும்
பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
|
அம்சம் |
விவரம் |
|
முதலீட்டுத்
தகுதி |
நிலம்
அல்லது கட்டட விற்பனையில் கிடைத்த நீண்டகால ஆதாயம் |
|
முதலீட்டுக்
காலம் |
விற்பனை
செய்த ஆறு மாதங்களுக்குள் |
|
அதிகபட்ச
முதலீடு |
ரூ.50
லட்சம் |
|
முதலீட்டுக்
காலப் பூட்டல் |
ஐந்து
ஆண்டுகள் |
|
வரிச்
சலுகை |
முதலீடு
செய்த தொகைக்கு ஏற்ப |
இந்தப்
பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு அவற்றின் வட்டி, காலம், பணத்தைத்
திரும்பப் பெறும் வசதி ஆகியவற்றைப் பரிசீலிக்க வேண்டும்.
6. மூலதன ஆதாயக் கணக்குத் திட்டம்
சொத்தை
விற்றுவிட்டோம். ஆனால் புதிய வீடு வாங்குவதற்கு இன்னும் கால அவகாசம்
தேவைப்படுகிறது என்றால் என்ன செய்வது?
இதற்காகவே மூலதன
ஆதாயக் கணக்குத் திட்டம் (Capital Gain Account Scheme) உள்ளது. வருமான வரிக்
கணக்கைத் தாக்கல் செய்வதற்கான உரிய கடைசி நாளுக்குள் பயன்படுத்தப்படாத தொகையை
அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் இந்தத் திட்டத்தின் கீழ் செலுத்தி வைக்கலாம்.
பின்னர் சட்டத்தில்
குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் புதிய வீடு வாங்கவோ அல்லது கட்டவோ அந்தப்
பணத்தைப் பயன்படுத்தலாம்.
குறிப்பிட்ட
காலத்திற்குள் பயன்படுத்தப்படாத தொகைக்கு வரி விதிக்கப்படும் என்பதால்
காலக்கெடுவைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.
7. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
முதலீட்டாளர்கள்
சொத்தை விற்பனை செய்வதற்கு முன்பே வரித் திட்டமிடலைத் தொடங்க வேண்டும். சொத்தை
வாங்கிய ஆவணங்கள், விற்பனைப் பத்திரம், பதிவு செலவுகள் மற்றும் மேம்பாட்டுச்
செலவுகளுக்கான ரசீதுகளைப் பாதுகாக்க வேண்டும்.
மேலும், பங்குகள்
மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் ஆதாயத்திற்கு வீடு வாங்குதல் அல்லது குறிப்பிட்ட
கடன் பத்திரங்களில் முதலீடு செய்தல் போன்ற எல்லாச் சலுகைகளும் பொருந்தாது என்பதைப்
புரிந்துகொள்ள வேண்டும்.
முடிவாக, மூலதன
ஆதாய வரியைச் சேமிப்பது என்பது வரியைத் தவிர்ப்பது அல்ல; சட்டம் வழங்கும்
சலுகைகளைச் சரியாகப் பயன்படுத்துவதாகும். சொத்தை விற்பனை செய்வதற்கு முன்பே வரி
ஆலோசகரை அணுகி, பொருத்தமான வழியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் முதலீட்டாளர்கள்
தங்களுடைய லாபத்தில் அதிகத் தொகையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
குறிப்பு: 2026
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், 2025 நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே
பழைய சட்டத்தின் 54, 54EC, 54F ஆகிய பிரிவுகளுக்குப் பதிலாக இந்தக் கட்டுரையில்
முறையே புதிய சட்டத்தின் 82, 85, 86 ஆகிய பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கூடுதல்
விவரங்களுக்கு தொடர்பு கொள்க
Tax Guru எல்.கிரி பாபு, ஆடிட்டர், www.gbfs.in
Ph no -
+91 98438 88007
E Mail
- info@gbfs.in
நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை
படிக்க https://bit.ly/4pzbVFB
Survive
First, Grow Next: Business is Not What You Think (‘முதலில் தப்பிப்பிழை; அடுத்து
வளரு: வணிகம் என்பது நீங்கள் நினைப்பது அல்ல’) என்ற ஆங்கில
புத்தகத்தின் ஆசிரியர் கிரி பாபு.
வணிகத்தை
முதலில் நிலைத்திருக்கச் செய்வது, நிதி ஒழுங்கைப் பின்பற்றுவது மற்றும்
தொழில்முனைவோருக்கு நடைமுறையில் பயன்படும் வணிக உத்திகளை உருவாக்குவது குறித்து
இந்தப் புத்தகம் கவனம் செலுத்துகிறது.
புத்தகத்தை வாங்க: https://www.amazon.in/Survive-First-Grow-Next-Business/dp/936006002X
தொடர்புக்கு
New
no 11 Old No 6, Ground Floor, Ramachandra Road, Pondy Bazaar, T Nagar, Chennai
- 600 017.
- +91 7845003441
- contact@gbfs.in
- Chennai,
India