முதலீடு செய்வதற்கு முன் உங்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய 5 முக்கிய
கேள்விகள்..! Investment Alert
ஏ.ஜி.வி ஸ்ரீநாத்
விஜய், இணை நிறுவனர், https://gbvmfservices.in/, ARN-148604
பெரும்பாலானோர்
முதலீட்டைத் தொடங்கும்போது முதலில் எந்தத் திட்டம் அதிக வருமானம் தரும், எந்த
நிறுவனத்தின் திட்டம் சிறந்தது, இப்போது எந்தத் துறை வளர்கிறது என்ற கேள்விகளையே
கேட்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒரு நல்ல முதலீட்டாளர் முதலில் சந்தையிடம் அல்ல,
தன்னிடமே சில முக்கியமான கேள்விகளை கேட்பார்.
முதலீட்டின்
வெற்றி என்பது திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில் மட்டும் இல்லை; அந்தத் திட்டம்
உங்கள் நிதி இலக்கு (Financial Goal), காலம், ரிஸ்க்கை ஏற்றுக்கொள்ளும் மனநிலை
மற்றும் நிதி நிலைக்கு பொருந்துகிறதா என்பதில்தான் இருக்கிறது. அதனால் முதலீடு
செய்வதற்கு முன் உங்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய சில அடிப்படை கேள்விகள் மிகவும்
முக்கியமானவை.
1 இந்த முதலீட்டை எத்தனை ஆண்டுகள் வைத்திருக்கப் போகிறேன்?
இது
முதலீட்டின் அடிப்படை கேள்வி. மூன்று ஆண்டுகளுக்குள் தேவைப்படும் பணத்தை நீண்டகால
வளர்ச்சி நோக்கமுள்ள நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது பொருத்தமற்றதாக இருக்கலாம்.
அதேபோல், பதினைந்து அல்லது இருபது ஆண்டுகள் கழித்து தேவைப்படும் பணத்தை குறுகிய
கால வருமானத் திட்டங்களான லிக்விட் ஃபண்ட், கடன் ஃபண்ட் போன்றவற்றில் வைத்தால்,
பணவீக்கத்தை வெல்வது கடினமாகிவிடும்.
உதாரணமாக,
குழந்தையின் உயர்கல்விக்காக பதினைந்து ஆண்டுகள் உள்ளதெனில் நீண்டகால வளர்ச்சியை
நோக்கமாகக் கொண்ட் ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்களைப் பரிசீலிக்கலாம். ஆனால் இரண்டு
ஆண்டுகளில் வீட்டுக் கடன் முன்பணம் செலுத்த வேண்டுமெனில், பாதுகாப்பு மற்றும்
நிலைத் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதாவது, குறுகிய கால ஃபிக்ஸட்
டெபாசிட் அல்லது கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.
2 பங்குச் சந்தை 20% வரை சரிந்தாலும்
நான் முதலீட்டைத் தொடருவேனா?
பங்குச்
சந்தை அல்லது பங்கு சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட் முதலீடுகளில் ஏற்றமும் இறக்கமும்
இயல்பானது. ஆனால் சந்தை சரியும் போது பலர் பயந்து முதலீட்டை நிறுத்திவிடுகிறார்கள்
அல்லது விற்றுவிடுகிறார்கள். அதுவே நீண்டகால செல்வ உருவாக்கத்திற்கு பெரிய
தடையாகிறது.
உங்கள்
முதலீடு ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாகக் குறைந்தாலும் நீங்கள் அமைதியாகத்
தொடர முடிகிறதா? என்ற கேள்விக்கு நேர்மையாக பதில் அளிக்க வேண்டும். பதில் ‘இல்லை’
என்றால், உங்கள் ரிஸ்க்கை ஏற்றுக் கொள்ளும் திறன் குறைவாக இருக்கலாம்.
அப்படியானால் உங்கள் முதலீட்டுக் கலவையை (Portfolio) மாற்றுவது நல்லது.
3. எனக்கு அவசர கால நிதி தனியாக உள்ளதா?
முதலீட்டிற்கு
முன் அவசர கால நிதி இருப்பது மிகவும் அவசியம். வேலை இழப்பு, மருத்துவச் செலவு,
குடும்ப அவசரம் அல்லது எதிர்பாராத பெரிய செலவு ஏற்பட்டால் முதலீட்டை உடனடியாக
உடைக்க வேண்டிய நிலை வரக்கூடாது.
பொதுவாக குடும்பத்தின்
மூன்று முதல் ஆறு மாத செலவுகளுக்கான தொகையை எளிதில் எடுக்கக்கூடிய வங்கி சேமிப்பு
கணக்கு, லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்
போன்ற பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பது நல்லது. இந்த நிதி இருந்தால் சந்தை
சரியும் காலத்திலும் உங்கள் முதலீட்டை தொடர முடியும்.
4 இந்த முதலீட்டின் நோக்கம் என்ன?
‘பணம்
சம்பாதிக்க வேண்டும்’ என்பது நோக்கம் அல்ல; அது ஒரு பொதுவான விருப்பம் மட்டுமே.
முதலீட்டின் நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும்.
உதாரணமாக,
· குழந்தையின் உயர்கல்வி
· திருமணச் செலவு
· சொந்த வீடு வாங்குதல்
· ஓய்வூதிய வாழ்க்கை
· கூடுதல் வருமானம்
· நீண்டகால செல்வ
உருவாக்கம்
என்ற நிதி
இலக்குகளில் எதற்காக முதலீடு செய்கிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். நிதி
இலக்கு தெளிவாக இருந்தால் மாத எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகை, முதலீட்டுக் காலம்
மற்றும் திட்டத் தேர்வு ஆகியவை எளிதாக முடிவு செய்யப்படுகின்றன.
5 இந்த திட்டம் என் மொத்த முதலீட்டில் எவ்வளவு பங்கு வகிக்கிறது?
ஒரு நல்ல
திட்டம் என்பதற்காக அதில் முழுப் பணத்தையும் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்
அல்ல. எந்த முதலீடும் தனியாக முழுமையான பாதுகாப்பை வழங்காது.
உங்கள் மொத்த
முதலீடு ரூ. 20 லட்சம் எனில், ஒரு திட்டத்தில் ரூ. 15 லட்சம் வைத்திருப்பது அதிகக்
குவிப்பு ரிஸ்க்கை ஏற்படுத்தும். பல்வேறு திட்டங்கள், சொத்து வகைகள் மற்றும் கால
எல்லைகளில் முதலீட்டை பிரித்து வைத்திருப்பது ரிஸ்க்கை குறைக்க உதவும்.
முதலீட்டுக்கு முன் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள்
|
கேள்வி |
ஏன்
முக்கியம்? |
|
இந்த முதலீட்டை எத்தனை ஆண்டுகள்
வைத்திருக்கப் போகிறேன்? |
திட்டத் தேர்வை முடிவு செய்ய
உதவும். |
|
பங்குச் சந்தை 20% வரை சரிந்தாலும்
நான் முதலீட்டைத் தொடருவேனா? |
உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனை
அறிய உதவும். |
|
எனக்கு அவசர கால நிதி தனியாக
உள்ளதா? |
முதலீட்டை இடையில் நிறுத்தாமல்
இருக்க உதவும். |
|
இந்த முதலீட்டின் நோக்கம் என்ன? |
கல்வி, ஓய்வூதியம், வீடு, செல்வ
உருவாக்கம் போன்ற நிதி இலக்குகளைத் தெளிவுபடுத்தும். |
|
இந்தத் திட்டம் என் மொத்த முதலீட்டில்
எவ்வளவு பங்கு வகிக்கிறது? |
ஒரே திட்டத்தில் அதிக முதலீட்டைத்
தவிர்க்க உதவும். |
முதலீட்டிற்கு முன் மனநிலையைச் சோதித்துக் கொள்ளுங்கள்
லாபம் தரும் முதலீடு என்பது சரியான கேள்விகளிலிருந்து தொடங்குகிறது
முதலீட்டில்
பெரிய லாபம் ஈட்டுவது முக்கியம். ஆனால் அதைவிட முக்கியமானது, தவறான முடிவுகளால்
பெரிய இழப்பைத் தவிர்ப்பதாகும். அதற்கான முதல் படி தன்னிடம் நேர்மையாக கேள்விகள்
கேட்பதே.
ஒரு திட்டம்
நல்லதா என்பதை விட, அந்தத் திட்டம் உங்களுக்கு
ஏற்றதா என்பதே முக்கியமான கேள்வி. உங்கள் முதலீட்டுக் காலம், நிதி
இலக்கு, ரிஸ்க் எடுக்கும் திறன், அவசர கால நிதி மற்றும் மொத்த முதலீட்டு அமைப்பு
ஆகியவற்றை மதிப்பீடு செய்து முதலீடு செய்தால், பங்குச் சந்தையின் ஏற்ற
இறக்கங்களைப் பொருட்படுத்தாமல் நீண்டகாலத்தில் செல்வத்தை உருவாக்கும் வாய்ப்பு
அதிகரிக்கும்.
முதலீடு
செய்வதற்கு முன் சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு இந்தக் கேள்விகளுக்கு பதில்
அளியுங்கள். அந்தச் சில நிமிடங்கள், உங்கள் எதிர்கால நிதி வாழ்க்கையில் பல
ஆண்டுகளுக்கான வித்தியாசத்தை உருவாக்கக்கூடும்.
கூடுதல் விவரம்
மற்றும் முதலீட்டுக்கு
ஏ.ஜி.வி ஸ்ரீநாத்
விஜய், இணை நிறுவனர், https://gbvmfservices.in/, ARN-148604
குவாலிஃபைடு பர்சனல்
ஃபைனான்ஸ் புரபஷனல் (QPFP) ஆவார். இவரின் தந்தையும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
ஆவார். பொள்ளாச்சியை சேர்ந்த இவர் சுமார் 2,000 தனிநபர்களுக்கு நிதிச் சேவை அளித்து
வருகிறார்.
நாணயம் விகடன் இதழில் வெளியான ஏ.ஜி.வி
ஸ்ரீநாத் விஜய் கட்டுரைகளை படிக்க https://bit.ly/4uj1I1Y
Phone - 9080705714
Email - srivj.sv@gmail.com
அலுவலக முகவரி:
எண் 33, எஸ்.வி. டவர்ஸ்,
நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 001,
தமிழ்நாடு.
அலுவலக நேரம்:
திங்கட்கிழமை – சனிக்கிழமை
காலை 10:00 மணி – மாலை 06:30 மணி.
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.