மியூச்சுவல் ஃபண்டு விநியோகம் வழியாக
நிதிசார் உள்ளடக்கத்தை
துரிதமாக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் அஞ்சல்துறை மற்றும் என்.எஸ்.இ
இந்திய சமூகத்தில் வரிசையில் கடைசியில் நிற்கும் நபரின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் 'அந்தியோதயா' தொலைநோக்கு இலட்சியத்தை நனவாக்கவும், 2047-க்குள் 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) இலக்கை எட்டவும் ஒரு முக்கிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அஞ்சல் துறை (DoP) மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய நிகழ்நேர நிதிச் சந்தையான நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) ஆகியவை இணைந்து, 'NSE MF Invest' தளத்தின் மூலம் பரஸ்பர நிதி சேவைகளை வழங்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இன்று கையெழுத்திட்டுள்ளன.
இந்தக் கூட்டணி, கிராமப்புற
மற்றும் சிறு நகரங்களில் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்களின், சும்மா இருக்கும் சிறு சேமிப்புகளை தொகைகளை
இலாபமீட்டும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து அவற்றை நிலையான செல்வமாக மாற்றுவதே இந்த ஒத்துழைப்பு நடவடிக்கையின் நோக்கமாகும்.
அஞ்சல் துறையின் பொது மேலாளர் (குடிமக்கள் மைய சேவைகள் மற்றும் கிராமப்புற
வணிகம்) திருமதி
மனிஷா பன்சால் பாதல் மற்றும் என்.எஸ்.இ-ன் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரி (CBDO)
திரு ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆகியோர், என்.எஸ்.இ-ன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல்
அதிகாரி (MD & CEO) திரு ஆஷிஷ்குமார் சவுகான் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டனர்.
முக்கிய அம்சங்கள்:
- பரந்த
கட்டமைப்பு: இந்தியாவின் 1.64
லட்சத்திற்கும் அதிகமான
அஞ்சலகங்கள் (இதில் 80%-க்கும் அதிகமானவை
கிராமப்புறங்களில் உள்ளன)
மற்றும் மக்களிடையே அஞ்சல் துறை கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையை, என்.எஸ்.இ-ன்
நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
- முதலீட்டு
இடைவெளியைக் குறைத்தல்:
தற்போது இந்தியக் குடும்பங்களில்
சுமார் 10% மட்டுமே பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களே அதிகம் முதலீடு செய்பவர்களாக
இருக்கின்றனர். அஞ்சல்
துறையின் பங்களிப்பு இந்த நிலையை மாற்றி,
கிராமப்புற மக்களையும்
முதலீட்டாளர்களாக மாற்றும்.
இந்திய அஞ்சல் துறையின் நாடெங்கிலும்
மக்களைச் சென்றடையும் திறனும்,
மக்கள் அதன் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும்,
கோடிக்கணக்கான தாய்மார்கள், விவசாயிகள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் கனவுகளுடன் பயணிக்கும் இளம் தலைமுறையினர் என அனைத்து தரப்பினரும் பரஸ்பர நிதிகள் மூலம்
சிறந்த நீண்டகால வளர்ச்சியையும், செல்வத்தையும் பெற வழிவகுக்கும் உருவாக்குகின்றன. இது அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு,
உள்நாட்டு முதலீட்டை அதிகரித்து, குறைந்த லாபம் தரும் சேமிப்பு முறைகளைச் சார்ந்திருப்பதை
குறைக்கும்.
இந்தக் கூட்டாண்மைக்கு NSE-ன் முக்கியப் பங்களிப்புகள்:
தொடக்கம் முதல் இறுதி வரை முழுமையான தீர்வு:
NSE MF Invest ஒரு முழுமையான, ஒருங்கிணைக்கப்பட்ட
தளமாகும். அதாவது, அஞ்சலகங்கள் அல்லது இந்தியா போஸ்ட் செயலி (App)
வழியாக மொபைல்/ஆதார் அடிப்படையிலான மின்னணு கே.ஒய்.சி (e-KYC)
முதல், வாடிக்கையாளர்களை இணைத்தல், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பின்னணிச் செயல்பாடுகளின்
ஒருங்கிணைப்பு வரை அனைத்தையும் உள்ளடக்கிய தீர்வை வழங்கி முதலீட்டாளர்களின்
அனைத்துத் தேவைகளையும் இத்தளம்
பூர்த்தி செய்யும்.
திறன் மேம்பாடு (2,500
தலைவர்கள் முன்னெடுப்பு திட்டம்): அஞ்சல் துறையின் 2,500 பணியாளர்களுக்கு NISM சான்றிதழ் மற்றும் EUIN
பதிவு பெறுவதற்கான முழு நிதியுதவியையும் NSE
வழங்கும். இவர்கள் கிராமப்புற இந்தியாவில் சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களாகச் செயல்படுவார்கள்.
இந்தியா முழுவதும் தொழில்நுட்ப ஆதரவு: இந்தியாவின் 23 அஞ்சல் வட்டங்களிலும் மற்றும் தக் பவனிலும் தொழில்நுட்ப
மற்றும் செயல்பாட்டு உதவிகளை 24/7 அடிப்படையில் வழங்க பிரத்யேக பணியாளர்களை NSE நியமனம் செய்யும்.
இத்திட்டத்தின் தொடக்கமானது எளிமையான, பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய
அணுகுமுறையுடன் அமையும். ஆரம்பத்தில் தாங்களாகவே முதலீடு செய்யும் (DIY)
வாடிக்கையாளர்களுக்கும், பின்னர் NISM சான்றிதழ் மற்றும் ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டு
பணியாளர்களின் உதவியுடன் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் இச்சேவை
வழங்கப்படும். இரண்டாம் கட்டத்தில், இது ஒரு முழு அளவிலான செல்வ மேலாண்மை அமைப்பாக
உருவெடுக்கும்.
கட்டம் I: எளிய திட்டங்களின் மூலம் வளர்ச்சி பயணம்
ஆரம்பத்தில் எளிமையான, சிறிய தொகையில் முதலீடு செய்யக்கூடிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
வாடிக்கையாளர்கள் தாங்களாகவே (DIY) முதலீடு செய்யும் முறையும், சான்றிதழ் பெற்ற பணியாளர்களின் உதவியுடன் முதலீடு செய்யும்
முறையும் நடைமுறைப்படுத்தப்படும்.
கட்டம் II: முழுமையான
செல்வ உருவாக்கத்திற்கான
வாய்ப்பை வழங்குதல்
இத்திட்டம் நிலைபெற்ற பிறகு, 55-க்கும் மேற்பட்ட ஏ.எம்.சி-களின் (AMCs)
அனைத்துத் திட்டங்களும், இலக்கு சார்ந்த முதலீடுகள் மற்றும் போர்ட்ஃபோலியோ
பகுப்பாய்வு மேம்பட்ட ஆலோசனை சேவைகள்,
பிராந்திய மொழிகளில் சேவை போன்ற
உயர்தர நிதிச் சேவைகளும் வழங்கப்படும்
விதத்தில் இந்த கூட்டாண்மை விரிவுபடுத்தப்படும்.
நிதிச் சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், சேமிப்பிலிருந்து முதலீட்டு கலாச்சாரத்தை ஊக்குவித்தல்,
தொழில்நுட்பம் மற்றும் பரந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி
கடைசி மைல் வரை சேவைகளைக் கொண்டு சேர்த்தல் மற்றும் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள்
மூலம் அபாயங்களைக் குறைத்தல் ஆகிய இந்திய அஞ்சல் துறையின் நோக்கங்களுடன் இந்த
முயற்சி மிகச்சரியாக ஒத்துப்போகிறது. இது அஞ்சலகங்களுக்கும்,
கிராமப்புற தபால்காரர்களுக்கும் (GDS)
புதிய கமிஷன் அடிப்படையிலான வருவாயை உருவாக்கும். மேலும்,
கிராமப்புற மக்கள், இளைஞர்கள் மற்றும் பெண் வாடிக்கையாளர்களுடனான பிணைப்பை
வலுப்படுத்துவதுடன், இந்திய அஞ்சல் துறையை ஒரு விரிவான நிதிச் சேவை வழங்கும் நிறுவனமாக
நிலைநிறுத்தும்.
என்எஸ்இ-ன் நிர்வாக இயக்குநர் &
தலைமை செயல் அதிகாரி திரு ஆஷிஷ்குமார் சவுகான் கூறியதாவது: “மூலதனச் சந்தைக்கு அணுகுவசதியை சாமானிய மக்களும் பெற்று பயனடைய அஞ்சல் துறையுடன் இணைந்திருப்பதில் நாங்கள் பெருமிதம்
கொள்கிறோம். என்.எஸ்.இ-ன் வலிமையான தளமும், அஞ்சல் துறையின் இணையற்ற சென்றடையும் திறனும் இணைந்து, ஒவ்வொரு
சிறு சேமிப்பாளரையும் செல்வத்தை உருவாக்குபவராக மாற்றும்; இதன் மூலம் கிராமப்புற இந்தியாவில் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயங்கள் எழுதப்படும்."
அஞ்சல் துறையின் பொது மேலாளர் திருமதி மனிஷா பன்சால் பாதல் கூறியதாவது: "நிதி
உள்ளடக்கம் மற்றும் குடிமக்கள் சார்ந்த சேவைகளை வழங்குவதில் அஞ்சல் துறை எப்போதும்
முக்கியப் பங்காற்றி வருகிறது. என்.எஸ்.இ உடனான இந்தக் கூட்டணி, நவீன
முதலீட்டுத் தீர்வுகளைப் பாதுகாப்பான முறையிலும், வெளிப்படையான முறையிலும்
எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவும்."
என்எஸ்இ நிறுவனத்தின் CBDO திரு
ஸ்ரீராம் கிருஷ்ணன் பேசுகையில்,
"தடங்கலற்ற
எளிதான ஒருங்கிணைப்பையும், பயிற்சியையும், ஆதரவையும் அஞ்சல் துறைக்கு வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அஞ்சல் துறை தனது
விநியோக வலிமையில் கவனம் செலுத்தும்போது, அதற்கான தொழில்நுட்ப முதுகெலும்பாக என்எஸ்இ செயல்படும்” என்று கூறினார்.
இந்தக் கூட்டு முயற்சியானது, சரியான இலாபமீட்டாமல் தேங்கிக் கிடக்கும் சேமிப்புகளை ஆதாயமளிக்கும் மூலதனச்
சந்தைக்குத் திருப்பி விடுவதன் மூலம், இந்திய குடும்பங்களை வலுப்படுத்துவதோடு,
நாட்டின் சமத்துவமான மற்றும் அனைத்து
தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு
பெரும் பங்களிப்பை வழங்கும்.
இந்திய தேசிய பங்குச் சந்தை லிமிடெட் குறித்து (NSE):
இந்திய தேசியப் பங்குச் சந்தை (NSE), இந்தியாவிலேயே முதன்முதலில் மின்னணு அல்லது கணினி திரை அடிப்படையிலான வர்த்தகத்தை செயல்படுத்திய பங்குச் சந்தையாகும். இது 1994-ல் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. செபியின் (SEBI) தரவுகளின்படி, 1995-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஈக்விட்டி பங்குகளின் மொத்த மற்றும் சராசரி தினசரி வர்த்தகத்தின் அடிப்படையில் இது இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையாகத் திகழ்கிறது. பங்குகளை சந்தையில் பட்டியலிடுதல், வர்த்தக சேவைகள், தீர்வு மற்றும் செட்டில்மென்ட் சேவைகள், குறியீடுகள் (indices), சந்தைத் தரவு வழங்கல்கள், தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் நிதி கல்வி வழங்கல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஒருங்கிணைக்கப்பட்ட வணிக மாதிரியை NSE கொண்டு இயங்கி வருகிறது. மேலும், வர்த்தக மற்றும் தீர்வு உறுப்பினர்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆகியவை செபி மற்றும் பங்குச் சந்தையின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதையும் NSE கண்காணிக்கிறது. NSE, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.
புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் கலாச்சாரத்தின் மூலம் தனது அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை இது உறுதி செய்கிறது. ஃபியூச்சர்ஸ் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் (FIA) பராமரிக்கும் 2024-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களின்படி, வர்த்தக அளவின் (ஒப்பந்தங்கள்) அடிப்படையில் NSE உலகின் மிகப்பெரிய டெரிவேடிவ்கள் பரிவர்த்தனை நிலையமாகும்.
உலகப் பங்குச் சந்தைகளின் கூட்டமைப்பு (WFE) பராமரிக்கும் புள்ளிவிவரங்களின்படி,
2024-ஆம் ஆண்டில் ஈக்விட்டி பிரிவில்
வர்த்தகங்களின் எண்ணிக்கையின் (மின்னணு ஆர்டர் புத்தகம்) அடிப்படையில் உலகில் 2-வது இடத்தை NSE பெற்றுள்ளது.