தங்கம், வெள்ளி விலை நீங்களே கணக்கு போட்டு வாங்கலாம்..!
Gold - Silver Ratio
யாசீன் சாஹர், நிதி நிபுணர்
தங்கம்,
வெள்ளி விலைகள் உயரும் போதும், குறையும் போதும் முதலீட்டாளர்களின் மனதில் எழும்
முக்கியமான கேள்வி, "இப்போது வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா?"
என்பதாகும். இதற்கு விடை காண உதவும் ஓர் எளிய அளவுகோல் தான் தங்கம் – வெள்ளி விகிதம் (Gold-Silver
Ratio). பங்குச் சந்தையில் ஒரு பங்கின் மதிப்பு அதிகமா அல்லது
குறைவா என்பதை அறிய, விலை – வருவாய் விகிதம் (P/E Ratio) பயன்படுத்தப்படுவது போல,
தங்கம் மற்றும் வெள்ளியின் ஒப்பீட்டு மதிப்பை அறிய இந்த விகிதம்
பயன்படுத்தப்படுகிறது.
தங்கம் – வெள்ளி விகிதம்: தங்கம், வெள்ளி விலை நியாயமானதா என்பதை நீங்களே
கணக்கிடலாம்..!
தங்கம், வெள்ளி விலை ஏன் எப்போதும் ஒரே திசையில்
நகராது?
தங்கமும்
வெள்ளியும் இரண்டும் விலை மதிப்புள்ள உலோகங்கள் என்றாலும், அவற்றின் விலை ஒரே
வேகத்தில் உயர்வதோ அல்லது சரிவதோ இல்லை. உலக பொருளாதாரம், பணவீக்கம், வட்டி விகிதங்கள்,
தொழில்துறை தேவை, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மனப்பான்மை, மத்திய வங்கிகளின்
நடவடிக்கைகள் போன்ற பல காரணிகளால் இந்த இரு உலோகங்களின் விலையும் மாறுபடுகின்றன.
கடந்த சில
ஆண்டுகளில் தங்கமும் வெள்ளியும் புதிய உச்சத்தை எட்டிய நிலையில், அதன் பின்னர்
விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டன. இதுபோன்ற சூழலில் தற்போதைய விலை நியாயமானதா
என்பதை அறிய உதவும் ஓர் எளிய கருவிதான் தங்கம் – வெள்ளி விகிதம்.
தங்கம் – வெள்ளி விகிதம் என்றால் என்ன?
ஒரு அவுன்ஸ்
தங்கம் வாங்க எத்தனை அவுன்ஸ் வெள்ளி தேவைப்படுகிறது என்பதைக் காட்டும் கணக்கே
தங்கம் – வெள்ளி விகிதம் ஆகும்.
இந்த விகிதம்
இரண்டு உலோகங்களின் சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
கணக்கிடும் முறை
தங்கம்
– வெள்ளி விகிதம் = ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ÷ ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை
உதாரணமாக,
· ஒரு அவுன்ஸ் தங்கத்தின்
விலை = 4,060 டாலர்
· ஒரு அவுன்ஸ்
வெள்ளியின் விலை = 60 டாலர் என வைத்துக் கொள்வோம்.
அப்படியானால்,
4,000
÷ 60 = 67.66
அதாவது, ஒரு
அவுன்ஸ் தங்கம் வாங்க சுமார் 67.66
அவுன்ஸ் வெள்ளி தேவைப்படுகிறது.
இந்த விகிதத்தை எப்படி புரிந்துகொள்வது?
பொதுவாக இந்த
விகிதம் 65 முதல் 70 வரை இருந்தால், தங்கமும் வெள்ளியும் ஒப்பீட்டளவில் சமநிலையான
மதிப்பில் இருப்பதாக பல சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இது
நிரந்தரமான விதிமுறை அல்ல. காலப்போக்கில் சந்தை நிலைக்கு ஏற்ப இந்த சராசரி
மாறக்கூடும்.
விகிதம் அதிகமாக இருந்தால், தங்கம் வாங்க அதிக அளவு வெள்ளி
தேவைப்படுகிறது.
இதன் பொருள்:
· வெள்ளியின் விலை
ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கலாம்.
· தங்கத்தின் விலை
ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கலாம்.
· எதிர்காலத்தில் வெள்ளி
வேகமாக உயர வாய்ப்பு இருப்பதாக சில முதலீட்டாளர்கள் கருதுவார்கள்.
விகிதம் குறைவாக இருந்தால்
தங்கம் வாங்க
குறைந்த அளவு வெள்ளியே போதுமானதாக இருக்கும்.
இதன் பொருள்:
· வெள்ளியின் விலை
ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கலாம்.
· தங்கத்தின் விலை
ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கலாம்.
· சிலர் வெள்ளியில்
இருந்து தங்கத்திற்கு மாறும் முடிவை எடுக்கலாம்.
எளிய அட்டவணை:
|
தங்கம்
– வெள்ளி விகிதம் |
பொதுவான
விளக்கம் |
முதலீட்டாளர்கள்
கவனிக்க வேண்டியது |
|
60-க்கும் குறைவு |
வெள்ளி ஒப்பீட்டளவில் விலை உயர்ந்திருக்கலாம் |
தங்கத்தை கவனிக்கலாம் |
|
65–70 |
சமநிலை நிலை |
வழக்கமான முதலீட்டை தொடரலாம் |
|
70–80 |
வெள்ளி ஒப்பீட்டளவில் மலிவாக இருக்கலாம் |
வெள்ளியை கவனிக்கலாம் |
இந்த விகிதத்தை மட்டும் நம்பி முதலீடு செய்யலாமா?
இல்லை. இந்த விகிதம் ஒரு
வழிகாட்டி மட்டுமே. இதை மட்டுமே வைத்து முதலீட்டு முடிவெடுப்பது சரியான அணுகுமுறை அல்ல.
பின்வரும்
அம்சங்களையும் சேர்த்து கவனிக்க வேண்டும்.
· உலக பொருளாதார நிலை
· பணவீக்கத்தின் போக்கு
· அமெரிக்க மத்திய
வங்கியின் வட்டி விகித முடிவுகள்
· அமெரிக்க டாலரின்
மதிப்பு
· மத்திய வங்கிகளின்
தங்கக் கொள்முதல்
· வெள்ளிக்கான
தொழில்துறை தேவை
· சூரிய மின்சக்தி,
மின்னணு சாதன உற்பத்தி வளர்ச்சி
வெள்ளிக்கு தொழில்துறை தேவை ஏன் முக்கியம்?
தங்கம்
பெரும்பாலும் முதலீடு மற்றும் ஆபரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஆனால்
வெள்ளி,
· சூரிய மின்சக்தி தகடுகள்
· மின்சார வாகனங்கள்
· மின்னணு சாதனங்கள்
· மருத்துவ உபகரணங்கள்
· தொழிற்துறை உற்பத்தி
போன்ற பல
துறைகளில் பயன்படுகிறது.
எனவே உலக
தொழில்துறை வளர்ச்சி அதிகரித்தால் வெள்ளியின் தேவை அதிகரித்து, அதன் விலையும்
உயரக்கூடும்.
முதலீட்டாளர்கள் இந்த விகிதத்தை எப்படி பயன்படுத்தலாம்?
நீண்டகால
முதலீட்டாளர்கள் தங்களின் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டு விகிதத்தை மாற்ற இந்தக்
கணக்கை ஒரு குறியீடாக பயன்படுத்தலாம்.
உதாரணமாக,
தங்கம் – வெள்ளி விகிதம் மிக அதிகமாக இருந்தால், புதிய முதலீட்டில் ஒரு பகுதியை
வெள்ளிக்கு ஒதுக்கலாம் என்று சிலர் பரிசீலிக்கலாம். அதேபோல் விகிதம் மிகவும்
குறைவாக இருந்தால், தங்கத்தில் முதலீட்டை அதிகரிப்பதையும் ஆய்வு செய்யலாம்.
இருப்பினும்
இந்த மாற்றங்களை ஒரே நேரத்தில் செய்யாமல், தவணை முறையில் செய்வது ரிஸ்க்கை
குறைக்கும்.
யாருக்கு இந்த விகிதம் பயனுள்ளதாக இருக்கும்?
· தங்கம் மற்றும்
வெள்ளியில் முதலீடு செய்பவர்கள்
· நீண்டகால செல்வ
உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டவர்கள்
· கோல்டு / சில்வர்
இ.டி.எஃப், சேவிங்ஸ் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்பவர்கள்
· சந்தை மதிப்பீட்டை
புரிந்து கொள்ள விரும்பும் முதலீட்டாளர்கள்
· முதலீட்டு சொத்துகளை
சமநிலைப்படுத்த நினைப்பவர்கள்
தங்கம் –
வெள்ளி விகிதம் என்பது எதிர்கால விலையை துல்லியமாக கணிக்கும் கருவி அல்ல. ஆனால்,
தற்போதைய சந்தை மதிப்பீட்டை புரிந்துகொள்ள உதவும் முக்கியமான குறியீடாகும். ஓர்
உலோகம் ஒப்பீட்டளவில் விலை அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என்பதை அறிய இது
உதவுகிறது.
எனவே, தங்கம்
அல்லது வெள்ளியில் முதலீடு செய்யும் முன், தற்போதைய சந்தை விலை மட்டுமல்லாமல்,
தங்கம் – வெள்ளி விகிதத்தையும், உலக பொருளாதார சூழலையும், உங்கள் முதலீட்டு
இலக்கையும் இணைத்து பரிசீலித்தால், மேலும் நிதானமான மற்றும் அறிவார்ந்த முதலீட்டு
முடிவுகளை எடுக்க முடியும்.
திரு.
யாசின் சஹாரை rahas84@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 98433 13512 என்ற
தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நிதி
நிபுணர் திரு. யாசின் சஹார், முன்னணி தனிநபர் நிதி இதழ்களான நாணயம் விகடன், அவள்
விகடன் மற்றும் Vikatan.com ஆகியவற்றில் எழுதிய கட்டுரைகளை இந்த இணைப்பில்
படிக்கலாம்: https://bit.ly/4mcEqWq
யாசின் சஹார் ஒரு முதலீட்டு உத்தி நிபுணரும் எழுத்தாளரும்
ஆவார். சொத்து ஒதுக்கீடு, மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் செல்வ உருவாக்கம் ஆகியவற்றில்
கவனம் செலுத்தி வருகிறார். நிதி சந்தைகள், மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நீண்டகால முதலீட்டு
உத்திகள் குறித்து விரிவாக எழுதுகிறார். இதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும்
அவருடைய தனிப்பட்ட கருத்துகளே.