வாழ்க்கை
சுழற்சி மியூச்சுவல் ஃபண்டுகள்: நிதி இலக்குத் தேதிக்கேற்ப மாறும் முதலீடு! Life
Cycle Funds
ஆர்.எஸ்.குமார், நிறுவனர், சம்பத்
ஃபைனான்ஷியல் சர்வீசஸ், மொபைல்: 98414 08824, ARN 246089
“இன்னும் 20 ஆண்டுகளில் மகளின்
உயர் கல்விக்குப் பணம் தேவை. இப்போது பங்குகளில் முதலீடு செய்தால் சரியாக
இருக்குமா?” என்று ரவி கேட்டார்.
“இப்போது வேண்டாம் என்று சொல்ல
முடியாது. ஆனால், அந்த இலக்கு நெருங்கும்போது பங்குகளில் இருக்கும் பணத்தைப்
படிப்படியாகக் கடன் முதலீடுகளுக்கு மாற்ற வேண்டியிருக்கும்!” என்றார் நண்பர்.
“அதை நாமே ஒவ்வொரு ஆண்டும்
செய்ய வேண்டுமா?”
வாழ்க்கை சுழற்சி
ஃபண்டுகள்!
“அதற்காகவே வந்திருக்கிறது வாழ்க்கை சுழற்சி ஃபண்டுகள்! (Life
Cycle Funds)”
முதலீட்டாளரின் நிதி இலக்குத்
தேதி நெருங்க நெருங்க, பங்கு சந்தை சார்ந்த முதலீடுகளிலிருந்து கடன் சந்தை
முதலீடுகளுக்கு முதலீட்டை தானாக மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வகை
மியூச்சுவல் ஃபண்ட்தான் வாழ்க்கை சுழற்சி ஃபண்டுகள்.
பங்குச் சந்தை, கடன்
பத்திரங்கள் மட்டுமல்லாமல் தங்கம், வெள்ளி, இன்விட்ஸ் போன்றவற்றிலும் குறிப்பிட்ட
அளவு முதலீடு செய்ய இந்த ஃபண்டுகளுக்கு அனுமதி உள்ளது.
நிதி இலக்குக்கு ஏற்ப மாறும் முதலீடு!
வாழ்க்கை சுழற்சி ஃபண்டுகளின்
முக்கியமான சிறப்பு, முன்கூட்டியே
நிர்ணயிக்கப்பட்ட முதலீட்டுப் பாதை என்பதுதான்.
உதாரணமாக, 30 ஆண்டுகள்
இலக்குக் காலம் கொண்ட ஒரு வாழ்க்கை சுழற்சி ஃபண்டில் தொடக்கத்தில் பங்குகளுக்கு
அதிக ஒதுக்கீடு இருக்கும். இலக்கு நெருங்க நெருங்க பங்குகளின் அளவு குறைந்து, கடன்
பத்திர முதலீடுகளின் அளவு அதிகரிக்கும்.
இதனால், முதலீட்டாளர் தன்னுடைய
முதலீட்டில் அடிக்கடி மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை குறைகிறது.
5 முதல் 30 ஆண்டுகள் வரை!
SEBI விதிமுறைகளின்படி,
வாழ்க்கை சுழற்சி ஃபண்டுகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அதிகபட்சம் 30 ஆண்டுகள்
முதலீட்டுக் காலமாக இருக்கலாம். மேலும், 5
ஆண்டுகளின் மடங்குகளில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். அதாவது 5, 10, 15, 20,
25 மற்றும் 30 ஆண்டுகள் காலக்கெடுவில் ஃபண்டுகள் வந்துள்ளன.
ஒரு மியூச்சுவல் ஃபண்ட்
நிறுவனம் ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஆறு வாழ்க்கை சுழற்சி ஃபண்டுகளை முதலீட்டுக்காக
வைத்திருக்க முடியும்.
ஃபண்டின் பெயரிலேயே இலக்கு
ஆண்டு இடம் பெறும். உதாரணமாக, “Life
Cycle Fund 2045” அல்லது “Life
Cycle Fund 2055” என்று இருக்கும்.
பங்கு முதலீடு எப்படி குறையும்?
30 ஆண்டுகள் கொண்ட ஒரு
வாழ்க்கை சுழற்சி ஃபண்டை எடுத்துக்கொண்டால், அதன் முதலீட்டு அமைப்பு தோராயமாக
இவ்வாறு இருக்கும்:
|
இலக்கை அடைய மீதமுள்ள காலம் |
பங்கு முதலீடு |
கடன் முதலீடு |
தங்கம்/வெள்ளி உள்ளிட்டவை |
|
15–30
ஆண்டுகள் |
65–95% |
5–25% |
0–10% |
|
10–15
ஆண்டுகள் |
65–80% |
5–25% |
0–10% |
|
5–10
ஆண்டுகள் |
50–65% |
5–25% |
0–10% |
|
3–5
ஆண்டுகள் |
35–50% |
25–50% |
0–10% |
|
1–3
ஆண்டுகள் |
20–35% |
25–65% |
0–10% |
|
1
ஆண்டுக்குக் குறைவாக |
5–20% |
25–65% |
0–10% |
இந்த அளவுகள் திட்டத்தின்
இலக்குக் காலத்துக்கு ஏற்ப SEBI நிர்ணயித்த வரம்புகளுக்குள் இருக்கும்.
பாதுகாப்புக்கு முக்கியத்துவம்!
இலக்கு நெருங்கும்போது
பங்குகளின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக கடன் முதலீடுகள்
அதிகரிக்கின்றன.
அதிலும் கடன் முதலீடுகள் AA தரம் அல்லது அதற்கு மேல்
மதிப்பீடு பெற்ற பத்திரங்களில் இருக்க வேண்டும். மேலும், அந்தக் கடன்
பத்திரங்களின் மீதமுள்ள காலம் திட்டத்தின் இலக்குக் காலத்தைவிட அதிகமாக
இருக்கக்கூடாது.
ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான
காலம் மட்டுமே இருக்கும் நிலையில், சில வரம்புகளுக்குள் பங்கு சார்ந்த ஆர்பிட்ரேஜ்
(Equity Arbitrage) முதலீடும் செய்யலாம்.
முன்கூட்டியே எடுத்தால் கட்டணம் உண்டு!
நீண்டகால முதலீட்டை
ஊக்குவிக்கும் வகையில் வெளியேறும் கட்டணம் (Exit Load) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
|
முதலீட்டை எடுத்தால் |
வெளியேறும் கட்டணம் |
|
1
ஆண்டுக்குள் |
3% |
|
1–2
ஆண்டுகள் |
2% |
|
2–3
ஆண்டுகள் |
1% |
|
3
ஆண்டுகளுக்குப் பிறகு |
பொதுவாக இல்லை |
தனிப்பட்ட ஃபண்டின் தகவல்
ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளையும் முதலீட்டுக்கு முன் பார்க்க
வேண்டும்.
வருமான வரி விஷயத்தில் கவனம்!
வாழ்க்கை சுழற்சி ஃபண்டின் முதலீட்டு
அமைப்பு காலத்துக்கு ஏற்ப மாறுவதால், அதன் வரி விதிப்பின் அடிப்படையில் வெறும்
“கலப்பு ஃபண்ட்” (Hybrid Fund) என்று பொதுவாகக் கருதிவிடக் கூடாது.
திட்டத்தின் உண்மையான பங்கு
முதலீட்டு விகிதம் மற்றும் நடைமுறையில் பொருந்தும் வருமான வரி விதிகளின் அடிப்படையில்
வரி கணக்கிடப்படும். எனவே, முதலீட்டாளர் ஒவ்வொரு திட்டத்தின் தகவல் ஆவணம் மற்றும்
அப்போதைய வருமான வரி விதிமுறைகளைப் பார்த்த பிறகே முடிவு எடுப்பது அவசியம்.
யாருக்கு இது பொருத்தமாக இருக்கலாம்?
பணி ஓய்வுக் காலம்,
குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம்
போன்ற குறிப்பிட்ட
எதிர்கால நிதி இலக்குகளுக்காக நீண்டகாலம் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு,
இலக்கு நெருங்கும்போது சொத்து ஒதுக்கீட்டை தானாக மாற்றும் அமைப்பு பயனுள்ளதாக
இருக்கலாம்.
ஆனால், “இலக்குத் தேதி
வந்தவுடன் பணம் முழுமையாக பாதுகாப்பாக இருக்கும்” என்று இதைப் புரிந்து கொள்ளக்
கூடாது. இதில் பங்குகளில் குறிப்பிட்ட சதவிகிதம் நிறுவனப் பங்குகளில் முதலீடு
செய்யப்படுவதால் பங்குச் சந்தை ரிஸ்க் இருக்கும். குறிப்பாக ஆரம்ப ஆண்டுகளில்
பங்கு முதலீடு அதிகமாக இருப்பதால் மதிப்பில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம்.
முதலீட்டின் காலம்
நீண்டதாக இருந்தால் வளர்ச்சிக்கு பங்கு; இலக்கு நெருங்கும்போது பாதுகாப்புக்கு
கடன் சார்ந்த முதலீடு
என்ற அடிப்படைக் கருத்தைச் செயல்படுத்தும் புதிய அணுகுமுறையே வாழ்க்கை சுழற்சி
ஃபண்டுகள்.
இலக்கைத் தீர்மானித்து
முதலீட்டைத் தொடங்குவது ஒரு பக்கம்; இலக்கு நெருங்கும்போது ரிஸ்க்கைக் குறைப்பது
இன்னொரு பக்கம். இந்த இரண்டையும் ஒரே ஃபண்டின் மூலம் இணைக்க முயற்சிப்பதுதான் வாழ்க்கை சுழற்சி ஃபண்டுகளின் அடிப்படை
நோக்கம்.
கூடுதல்
விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..
ஆர்.எஸ்.குமார்,
நிறுவனர், சம்பத் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்
அலுவலக முகவரி:
எம் பிளாக் 305, அப்பாசாமி ப்ளூமிங்க்டேல் அபார்ட்மெண்ட்ஸ்
கிழக்கு பிரதான சாலை, சங்கர் நகர்,
பம்மல், சென்னை – 600 075
மொபைல்: 98414 08824
மின்னஞ்சல்: sampath.financialplan@gmail.com
ARN 246089
மியூச்சுவல் ஃபண்ட்
துறையில் 15 ஆண்டுகள் அனுபவம்
(வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாடுகள்)
Disclaimer: மியூச்சுவல்
ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும்
முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.