புதிய வரிமுறையை ஏன் அதிகம் பேர் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா? New Tax Regime
ஆர். ஜெகதீஷ், ஆடிட்டர், தேனி
இந்திய வருமான வரித்துறையில் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள “புதிய வரிமுறை” (New Tax Regime) தற்போது பெரும்பாலான வரி செலுத்துபவர்களின் முதன்மைத் தேர்வாக மாறியுள்ளது. எளிமையான அமைப்பு, குறைந்த வரி விகிதங்கள் மற்றும் சிக்கலற்ற நடைமுறை போன்ற காரணங்களால் இன்று சுமார் 88 சதவீத தனிநபர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
முன்பு நடைமுறையில் இருந்த பழைய வரிமுறையில் பல்வேறு கழிவுகள் (deductions), முதலீட்டு ஆதாரங்கள், பில்கள், ஆவணங்கள் ஆகியவை கட்டாயமாக இருந்தன.
வரிச்சலுகை பெற வேண்டும் என்றால் பப்ளிக் பிராவிடென்ட், இ.எல்.எஸ்.எஸ் (ELSS) மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்திருக்க வேண்டும். ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு பாலிசிகளுக்கு பிரீமியம் கட்டி வர வேண்டும். இவற்றுக்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். இதனால் வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை சிக்கலாகவும், நேரம் எடுத்துக்கொள்ளும் ஒன்றாகவும் இருந்தது.
ஆனால் புதிய வரிமுறை இந்தச் சிக்கல்களை முற்றிலும் நீக்கியுள்ளது. எந்த வகை முதலீட்டு ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. வருமானத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட குறைந்த விகிதத்தில் நேரடியாக வரி செலுத்தினால் போதும். இதுவே புதிய முறையின் மிகப்பெரிய ஈர்ப்பாக உள்ளது.
புதிய வரிமுறையை அதிகம் பேர் தேர்வு செய்யும் முக்கிய காரணங்கள்
1. எளிமையான நடைமுறை
ஆவணங்கள் சேகரித்தல், கழிவுகளை கணக்கிடுதல் போன்ற சிரமங்கள் இல்லை. இதனால் வரி தாக்கல் மிகவும் சுலபமாகிறது.
2. குறைந்த வரி விகிதங்கள்
பழைய முறையை ஒப்பிடுகையில் புதிய முறையில் பல படிநிலைகளில் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மிதமான வருமானம் உள்ளவர்களுக்கு நேரடியாக நன்மை கிடைக்கிறது.
3. முதலீட்டு கட்டாயம் இல்லை
வரிச்சலுகைக்காக தேவையில்லாத முதலீடுகளைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தனிநபர்கள் தங்கள் நிதி தேவைக்கேற்ப முதலீடு செய்ய முடிகிறது.
4. நேரச் சேமிப்பு
ஆவண சரிபார்ப்பு போன்றவை குறைவதால் வேலைப்பளு குறைகிறது.
5. புதிய தலைமுறைக்கு ஏற்றது
இளம் தொழிலாளர்கள், முதலீட்டில் அதிக ஆர்வம் இல்லாதவர்கள், எளிமையை விரும்புபவர்கள் ஆகியோருக்கு இந்த முறை மிகவும் வசதியாக உள்ளது.
புதிய வரிமுறையில் உள்ள முக்கிய வரிச்சலுகைகள்
புதிய முறையில் பெரும்பாலான கழிவுகள் நீக்கப்பட்டிருந்தாலும், சில முக்கிய சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன:
- நிலைக் கழிவு (Standard Deduction) – சம்பளதாரர்களுக்கு அடிப்படை கழிவு வழங்கப்படுகிறது.
- குடும்ப ஓய்வூதிய சலுகை (Family Pension Deduction) – குடும்ப ஓய்வூதிய வருமானத்திற்கு குறிப்பிட்ட அளவு கழிவு உண்டு.
- என்.பி.எஸ் நிறுவனத்தின் பங்களிப்பு (NPS Employer Contribution) – வேலை வழங்கும் நிறுவனம், செலுத்தும் என்.பி.எஸ் தொகைக்கு வரிவிலக்கு உள்ளது.
- 87A வரிச் சலுகை (Rebate under Section 87A) – நிதியாண்டில் ரூ.12 லட்சத்துக்கு குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு முழு வரிவிலக்கு பெறும் வாய்ப்பு.
- வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும்பட்சத்தில் வட்டிக்கு நிதியாண்டில் ரூ.2 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை
இதன் மூலம் நடுத்தர வருமானப் பிரிவினர் கூட புதிய முறையில் கணிசமான அளவு வரி சேமிக்க முடிகிறது.
பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையே மாற்றம்:
சம்பளம் வாங்கும் தனிநபர்கள் ஒவ்வொரு ஆண்டும் வரி முறையை மாற்றிக்கொள்ளலாம் . இருப்பினும், வணிக அல்லது தொழில்முறை வருமானம் உள்ள தனிநபர்கள் வாழ்நாளில் ஒரு முறை படிவம் 10-IEA படிவத்தை நிரப்புவதன் மூலம் வரி முறையை புதியதிலிருந்து பழையதுக்கு மாற்றலாம். பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்த பிறகு, புதிய வரி முறையில் மீண்டும் நுழைய அவர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே.
பழைய முறை தொடரும் சுதந்திரம்
எனினும், அதிக முதலீடுகள் செய்திருப்பவர்கள், வீட்டு வாடகை சலுகை (HRA), வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி கழிவு போன்றவற்றை முழுமையாகப் பயன்படுத்துவோர் பழைய வரிமுறை இன்னும் பயனுள்ளதாக இருக்கலாம். எனவே, வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு எந்த முறையை வேண்டுமானாலும் தேர்வு செய்யும் சுதந்திரம் தொடர்ந்தும் வழங்கப்படுகிறது.
நிறைவாக, புதிய வரிமுறை – “குறைந்த வரி, குறைந்த சிக்கல்” என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையை விரும்பும் பெரும்பாலான மக்களுக்கு இது மிகவும் ஏற்றதாக உள்ளது. அதனால்தான் இன்று பெரும்பான்மையான வரி செலுத்துபவர்கள் இந்த முறையைத் தேர்வு செய்து வருகின்றனர்.
எந்த முறையைத் தேர்வு செய்வது என்பது ஒவ்வொருவரின் வருமான அமைப்பு, முதலீட்டு திட்டம் மற்றும் நிதி இலக்குகளைப் பொறுத்தது. சரியான கணக்கீடு செய்து, தங்களுக்கு ஏற்ற முறையை தேர்வு செய்வதே அறிவார்ந்த நிதி முடிவாக இருக்கும்.
சி.ஏ. ஆர். ஜெகதீஷ், நிறுவன கூட்டாளர்,
ஜெகதீஷ் & ஜெஃபர்சன் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ்
நாணயம் விகடன் – முன்னணி தனிநபர் நிதி இதழில், திரு. சி.ஏ. ஆர். ஜெகதீஷ் எழுதிய கட்டுரைகளைப் படிக்க:
தொலைபேசி: 04546 254234, 04546 254254, +91 94433 84627
மின்னஞ்சல்: ranajegadeesh@yahoo.co.in
இணையதளம்: jjauditfirm.icai.org
முகவரி:
62-A, என்.ஆர்.டி மெயின் ரோடு,
தேனி – 625531
"திருத்தம் பலவற்றைச் செய்யும், ஆனால் ஊக்கம் அதைவிட அதிகம் செய்யும்."
– யோஹான் வோல்ஃப்காங் வான் கோதே

