சொத்து பதிவுகளின்
போது அசல் ஆவணங்கள் கட்டாயம்: பதிவுச் சட்டத்தின் 34-சி பிரிவு ரத்து..!
தமிழகத்தில் போலி சொத்து ஆவணப் பதிவுகளைத் தடுக்க அரசு பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பதிவு சட்டத்தில் புதிய 34-சி (34-C) பிரிவு சேர்க்கப்பட்டு, சொத்து பதிவுகளின் போது அசல் ஆவணங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், சொத்தை விற்கும் நபர், அந்த சொத்துக்கான முந்தைய அசல் ஆவணத்தையும், 10 நாட்களுக்குள் பெறப்பட்ட வில்லங்கச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். முந்தைய அசல் ஆவணம் தொலைந்துவிட்டால், காவல் துறையின் தேடலில் கிடைக்காத சான்றிதழ் மற்றும் நாளிதழில் கொடுக்கப்பட்ட விளம்பர நகல் சமர்ப்பிக்க வேண்டும், அடமானம் இருந்தால் ‘தடையில்லாச் சான்று’ வழங்க வேண்டும். இந்தச் சட்டத்திருத்தத்திற்கு 2026 ஜனவரி 23-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வந்தது.
ஆனால், இந்தச்
சட்டத்தின் அமலாக்கத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. குறிப்பாக, சார் பதிவாளர்களுக்கு
தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படாத காரணத்தால், அசல் ஆவணங்கள் இல்லாத பல சொத்து பரிமாற்றப்
பதிவுகளை அவர்கள் ஏற்க மறுத்ததாகக் கூறப்பட்டது. இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை
எதிர்கொண்டனர்.
இந்த நிலையில்,
கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் குமார் துகார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு
தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், பதிவு சட்டத்தின் 34-சி பிரிவு நடைமுறையில் தன்னிச்சையானதாக
செயல்படுவதால், பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அந்தச் சட்டப்
பிரிவை செல்லாததாக அறிவிக்க வேண்டும் எனக் கோரினார்.
இந்த வழக்கை நீதிபதிகள்
சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில்,
நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பில்,
“பதிவுச் சட்டத்தின் 34-சி பிரிவு என்பது, ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட
விதி 55-ஏ-ஐ மறைமுகமாக மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியாகவே உள்ளது” என்று நீதிபதிகள்
கருத்து தெரிவித்தனர்.
மேலும், சட்டமன்றம்
தனது நீதிசார்ந்த அதிகாரங்களை நிர்வாகத் துறைக்கு வழங்க முடியாது என்றும், அவ்வாறு
செய்வது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான அதிகாரப் பகிர்வு
(Separation of Powers) கொள்கைக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அதோடு, அரசியலமைப்புச்
சட்டத்தின் 300-ஏ பிரிவின் கீழ் பாதுகாக்கப்படும் சொத்துரிமையில் நியாயமற்ற மற்றும்
தன்னிச்சையான கட்டுப்பாடுகளை இந்தச் சட்டம் விதிப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், சொத்து மாற்றச் சட்டம் மற்றும் ஒப்பந்தச் சட்டம் போன்ற முக்கிய சட்டங்களின்
அடிப்படை விதிமுறைகளுடனும் இந்தச் சட்டத்திருத்தம் முரண்படுவதாக நீதிபதிகள் கருத்து
தெரிவித்தனர்.
இந்தக் காரணங்களின்
அடிப்படையில், பதிவுச் சட்டத்தில் 34-சி பிரிவைச் சேர்த்து இயற்றப்பட்ட சட்டத்திருத்தம்
அதிகார வரம்பை மீறியதாக அறிவிக்கப்பட்டு, அது முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இதேவேளை, பொதுமக்களுக்கு
அதிக வெளிப்படைத்தன்மையை வழங்கும் நோக்கில் நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளையும்
பிறப்பித்துள்ளது. அதன்படி, வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate) வழங்கும்
போது, சொத்தின் தற்போதைய மற்றும் முந்தைய வில்லங்க விவரங்களும் இடம்பெற வேண்டும். மேலும்,
நில அளவை எண் (Survey Number) மற்றும் கதவு எண் (Door Number) ஆகிய விவரங்களும் வில்லங்கச்
சான்றிதழில் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என பதிவுத் துறைத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் உடனடியாகத் தொடங்கப்பட்டு,
படிப்படியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு,
சொத்து உரிமைகள் பாதுகாப்பு, பதிவு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின்
நலன் ஆகியவற்றை முன்னிறுத்தும் முக்கியமான தீர்ப்பாகக் கருதப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில்
சொத்து பரிவர்த்தனைகள் தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க
மாற்றங்களை ஏற்படுத்தும் என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.